My Joomla

சிறுகதை இலக்கியம் PDF அச்சிடுக மின்-அஞ்சல்


(வ.முனியன்)


முன்னுரை

மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியாக இருந்தவர்களுள் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் 'இலக்கியக் குரிசில்' டாக்டர் மா.இராமையா ஆவார். 'மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்' என்னும் அருமையான நூலை ஆக்கியளித்த பெருமை மா.இராமையா அவர்களைச் சாரும். இந்நூலின் முதற் பதிப்பு மார்ச் 1996இல் வெளி வந்தது. எனினும், இதற்கு முன்னரே 'மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலை 1978ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டிருந்தார். இந்நூலின் தொடர்ச்சியாகவே 'மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்' பின்னர் அவரால் எழுதப்பெற்றது. 

மற்றொருவர் ந.பாலபாஸ்கரன் (பாலபாஸ்கரன்) என்னும் பெயரினர். மலேசியச் சிறுகதையின் தொடக்க காலம் பற்றி எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பாலபாஸ்கரன். இவர் வானம்பாடி இதழில் எழுதிய 'கதை வகுப்பு: ஓர் ஆராய்ச்சி' என்னும் தொடர்கட்டுரை இந்நாட்டுச் சிறுகதை வளர்ச்சியின் தொடக்க காலத்தின் முக்கியத் தகவல்களை மலேசிய எழுத்துலகம் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியாக இருந்தது. பின்னர், வானம்பாடியில் தாம் எழுதிய தகவல்களையும் உள்ளடக்கி 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை' என்னும் நூல் ஒன்றை 1995இல் வெளியிட்டார். தம்முடைய முதுகலைப் பட்டப் படிப்பிற்கு மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டபோது பழைய ஏடுகளிலிருந்து கிடைத்த தகவல்களே இவரின் இந்த நூல் பிறப்பதற்கு வழிகோலின. இந்நூலைத் தவிர்த்து, பாலபாஸ்கரன் அவர்கள் ஆங்கிலத்திலும் "The Malaysian Tamil Short Stories 1930 - 1980 A Critical Study"என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். இவ்வாசிரியரின் 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை' தொடக்ககாலம் முதல் ஜப்பானியர் ஆட்சிக்காலம் வரையிலும் உள்ள வரலாற்றையும் சிறுகதைகளின் பண்புகளையும் பற்றியே அதிகம் பேசுகிறது. ஆனால், இந்நூல் 1980ஆம் ஆண்டு வரையிலும் உள்ள தமிழ்ச் சிறுகதைத்துறையைப் பற்றி மேலும் பல அரிய தகவல்களுடன் விரிவான ஓர் ஆராய்ச்சி நூலாகவே மலர்ந்துள்ளது. இந்நூலின் பதிப்பாண்டு நூலில் குறிப்பிடப்படவில்லையாயினும் பாலபாஸ்கரன் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள தேதியைக் கொண்டு (30 டிசம்பர், 2006), 2006ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2007ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது வெளியிடப்பட்டிருக்கலாம் எனக் கருத இடம் தருகிறது. சுருங்கக் கூறுவதானால், பாலபாஸ்கரனின் இந்நூல் மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் ஒரு மைல் கல் என்றும் கூறலாம். மலேசியத் தமிழ் இலக்கிய உலகம், குறிப்பாகச் சிறுகதைத்துறையுலகம், 'இலக்கியக் குரிசில்' டாக்டர் மா.இராமையா அவர்களுக்கும் பாலபாஸ்கரன் அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றது.

மலேசியச் சிறுகதையின் தொடக்கம்


மலேசியாவின் சிறுகதை இலக்கியத்தைப் பொறுத்த மட்டிலும் இதற்கு ஏறத்தாழ எண்பது ஆண்டுக்கால வரலாறு உண்டு என்று கூறலாம். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் யார் என்ற கேள்விக்கு இன்றும் விடை காண முடியவில்லையாயினும், ஏறத்தாழ 1930ஆம் ஆண்டிலோ அதற்குச் சற்று முன்னரோ சிறுகதை எழுதப்பட்டிருக்கலாம் என்று துணிந்து கூறப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஏனெனில், 1930இல்தான் முதல் சிறுகதைத்தொகுப்பான "நவரச கதாமஞ்சரி: இவை இனிய கற்பிதக் கதைகள்" சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் வல்வை வே.சின்னைய்யா அவர்களால் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் ஐந்து சிறுகதைகள் அடங்கியிருந்தன. இத்தொகுப்பு நூறு பக்கங்களைக் கொண்டிருந்தது.2 வரலாற்றில் மிக முக்கியமான அச்சிறுகதைத் தொகுப்பு அந்த ஆண்டில் வெளியிடப்பட்டிருப்பதனால் சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் 1930க்கு முன்னரே மலேசியாவில் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவது தவறாகாது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டிலும் 1927-இல் வெளிவந்த வ.வே.சு. ஐயரின் "மங்கையர்க்கரசியின் காதல்" என்னும் தொகுப்பில் இடம்பெற்ற "குளந்தங்கரை அரசமரம்" என்னும் தலைப்பிலான சிறுகதையே முதல் சிறுகதை என்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமானால் தமிழ்நாட்டுச் சிறுகதை இலக்கியத்தின் தோற்றத்திற்கும் மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் தோற்றத்திற்கும் கால இடைவெளி அதிகமில்லை என்று உறுதியாகக் கூற முடியும். எனினும், 1888இல் சிங்கப்பூரைச் சேர்ந்த மகதூம் சாயுப்
என்பவர் 'ஒரு விநோத சம்பாஷணை' என்ற சிறுகதையை எழுதி அவரது இதழான சிங்கைநேசனில் பிரசுரித்திருந்தார் என்ற ஒரு தகவல் வரலாற்றுப்பூர்வமான உண்மையாக இருக்குமானால் தமிழ் நாட்டில் சிறுகதை தொடங்கப்படுவதற்கு முன்பே மலேசியாவில் சிறுகதை தோன்றிவிட்டது எனக் கொள்வதிலும் தவறேதும் இருக்காது. ஆயினும், இந்நாட்டுச் சிறுகதை இலக்கியத்திற்கு அன்றும் இன்றும் வழிகாட்டியாக இருந்து வருவது தமிழ்நாட்டுச் சிறுகதைத்துறை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

மலேசியச் சிறுகதை இலக்கியம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல கால கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்பதைப் பழம்பெரும் எழுத்தாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். தமது 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை'யில் பாலபாஸ்கரன் இக்காலகட்டங்களைத் தொடக்க காலம்(1930 - 1941), ஐப்பானியர் காலம் (1942 - 1945), கதை வகுப்பு முடியும் காலம் (1946 - 1952), முற்சுதந்திர காலம் (1953 - 1957) பிற்சுதந்திர காலம் (1958 -1969), மறுமலர்ச்சிக் காலம் (1970 -1978) எனப் பிரித்துக் காட்டுவார்.  தமது மேற்பட்டப் படிப்பிற்குச் சிறுகதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோது இருந்த நிலைமையை அடிப்படையாக வைத்து இந்த ஆறு காலகட்டங்களை நூலாசிரியர் நினைத்துப் பார்த்துள்ளார் எனத் தெரிகிறது. எனினும், மற்றக் காலகட்டங்களுக்கான ஆய்வைக் காண அவருடைய ஆங்கில நூலின் உதவியையே நாட வேண்டியுள்ளது. மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றின் அடுத்த காலகட்டத்தையும் உள்ளடக்கி 'இலக்கியக் குரிசில்' டாக்டர் மா. இராமையா அவர்கள் தமது நூலைப் படைத்திருக்கின்றாரெனினும் அந்த வரலாற்றுக் குறிப்புகளும் 1995ஆம் ஆண்டு என்னும் ஒரு கால வரம்புக்குட்பட்டதாகவே இருக்கின்றன. எனவே, அதற்குப் பின்னர் இன்று வரையுள்ள (2007) பன்னிரண்டு ஆண்டுக்கால மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றுக்கு இக்காலகட்டத்தில் வெளியீடு கண்டுள்ள சிறுகதைத் தொகுப்புகள், கருத்தரங்குகளில் படைக்கப்பட்ட கட்டுரைகள், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மாநில/வட்டார எழுத்தாளர் இயக்கங்கள் ஆகியவற்றின் முயற்சிகள், தமிழ் ஏடுகளின் பங்களிப்புகள், வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் கருத்துகள், தகவல்கள் போன்றவையே ஆதாரங்களாக உள்ளன.

மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பாலபாஸ்கரன் அவர்கள் குறிப்பிட்ட ஐந்து/ஆறு காலகட்டங்களும் மிக முக்கியமானவை. தமிழ்ச் சிறுகதை மலேசியாவில் வேரூன்ற வித்துகள் இடப்பட்டு நீர் ஊற்றி உரமும் போடப்பட்டு வளர்க்கப்பட்ட காலகட்டங்கள் அவை. ஜப்பானியர் ஆதிக்க காலத்தின்போதுகூட சிறுகதை நலிவுறாமல் தொடர்ந்து நடைபயின்று வந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்த்தால் இத்துறையை எத்துணைச் சிரமத்தோடு அன்றைய சிறுகதை முன்னோடிகள் வளர்த்துள்ளனர் என்பதைக் கண்டுகொள்ள முடியும். ஆயினும், இந்தக் காலகட்டங்களுள் மிக முக்கியமான ஒரு காலகட்டமாக தமிழ் நேசனின் கதை வகுப்புக் காலத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏறத்தாழ ஆறு மாதங்களே நடைபெற்ற இவ்வகுப்பு (கதை வகுப்பு பற்றிய தொடக்க அறிவிப்பு 26 நவம்பர் 1950லும், எழுத்தாளர் பரீட்சை வினாக்கள் 11 மார்ச் 1951லும், பரீட்சை முடிவுகள் 22.4.1951லும் தமிழ் நேசனில் இடம் பெற்றன) 4 மணி மணியான சிறுகதை எழுத்தாளர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்திச் சிறுகதைத்துறைக்கு வளம் சேர்த்தது. அவ்வகுப்பில் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் மேதை எழுத்தாளர் (3 பேர்), சிறந்த எழுத்தாளர் (23 பேர்), தேர்ந்த எழுத்தாளர் (19 பேர்), நல்ல எழுத்தாளர் (15 பேர்), ஆர்வ எழுத்தாளர் (18 பேர்) என்று சிறப்புப் பெற்றனர்.5 அப்போது எழுதத் தொடங்கிய பலர் மலேசியச் சிறுகதைத்துறைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. கதை வகுப்பிற்குப் பிறகு தமிழ் முரசு சிறுகதைத் துறையை வளர்க்க எழுத்தாளர் பேரவையை நடத்தியது. தமிழ் முரசு அளித்த ஊக்கத்தினால் அக்காலகட்டத்தில் சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வர ஆரம்பித்தன. அதன் பின்னர் கு. அழகிரிசாமி அவர்கள் தமிழ் நேசனின் ஆசிரியர் பொறுப்பேற்றபோது 1957இல் நடத்தப்பெற்ற இலக்கிய வட்டக்கூட்டங்களும்6 சிறுகதையின் உத்திமுறைகளை எடுத்துக் காட்டி சிறுகதையை வளர்க்க மேலும் துணை புரிந்தன.

மலேசியத் தமிழ் இலக்கியத்தை, அதிலும் குறிப்பாகச் சிறுகதையை, வளர்ப்பதில் தமிழ் நாள், கிழமை, திங்கள் இதழ்கள் ஆற்றிய பணி அளவிடற்கரிது. தமது தற்காலத் தமிழ் இலக்கியத்தில் "மலேசியத் தமிழ் இலக்கியத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பவை செய்தித் தாள்களே" என்பார் டாக்டர் இரா.தண்டாயுதம். எனினும், தொடக்க காலத்தில் வெளிவந்த எல்லா ஏடுகளிலும் சிறுகதைகள் வெளியிடப்பட்டன என்று கூறுதல் முடியாது. 1930 முதல் 1940 வரை தோன்றிய 48 ஏடுகளில் பதினைந்திற்கும் குறையாத ஏடுகளில் சிறுகதைகள் இடம் பிடித்திருந்தன என்றே பாலபாஸ்கரன் குறிப்பிடுகிறார். இவ்வேடுகளுள் இன்று வரை தொடர்ந்து சிறு சிறுகதைகளை வெளியிட்டு வரும் ஒரே ஏடு தமிழ் நேசன் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவை வரலாற்றில் மட்டுமே இடம் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

நவரச கதாமஞ்சரி: இவை இனிய கற்பிதக் கதைகள் சிங்கப்பூரில் பதிப்பிக்கப்பட்டாலும் அக்காலகட்டத்தில் மலாயாவும் சிங்கப்பூரும் ஒன்றாகவே இணைந்திருந்ததால் அதை மலேசிய இலக்கியம் என்று கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால், அதிலிருந்த ஐந்து கதைகளும் நீதி நெறியை வலியுறுத்துவதற்கென்றே படைக்கப்பட்டவை. இன்றைய சிறுகதை வடிவத்தோடு அவற்றை ஒப்பிட்டுப் பேசவும் முடியாது. "சிறுகதை என்றே இவற்றைச் சொல்ல முடியாது" என்கிறார் பாலபாஸ்கரன். எனினும், அவரே "புனைகதைக்கே உரிய பின்னோக்கு உத்தி, கடித உத்தி", உரையாடல் உத்தி ஆகியவற்றை இதில் காண முடிகின்றது என்றும் குறிப்பிடுகிறார். 

ஆயினும், அதற்குப் பின்னர் 1957க்குள் மலேசியச் சிறுகதைகள் வடிவத்திலும், கதைக்கட்டுக்கோப்பிலும் சிறுகதை உத்திகளிலும் நவரச கதாமஞ்சரியைவிடப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டிருந்தன என்பதில் ஐயமில்லை. எனினும், அக்காலத்தில்கூட சிறுகதையின் எல்லாப் பண்புகளையும் நன்கு பிரதிபலிக்கக்கூடிய கதைகள் அதிகமாக எழுதப்பட்டன என்பதாக இது பொருள்படாது. அந்த வகையில் மலேசியச் சிறுகதையின் வளர்ச்சி படிப்படியாக மிக மெதுவாகவே நிகழ்ந்தது. ஏறத்தாழ 1970ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் மண்ணின் மணத்தைக் காட்டுபவனாகவும் சிறுகதைப் பண்புகளை அதிகமாகப் பிரதிபலிப்பனவாகவும் வெளி வரத் தொடங்கின. 

சிறுகதைக்கான கருப்பொருள்கள்


தொடக்க காலத்துச் (1930 - 1941) சிறுகதைகள் பெரும்பாலும் காதல் கதைகளாகவே இருந்தன. தமிழ்நாட்டுச் சூழலில் எழுதப்பட்டன. மேலும் சீர்திருத்தத் திருமணம், மதுவிலக்கு, மாதரின் முன்னேற்றம், தொழிலாளர் துயரம், வீரத்தின் மாண்பு, நாட்டுப்பற்று ஆகியவற்றைக் கொண்ட கதைகளே அதிகம் எழுதப்பட்டன.  எனினும், அவற்றில் சிறுகதைக்குரிய பண்புகள் இல்லை. மேலும், ஒருமையும் முழுமையும் வேறு இல்லை. நீதியை வலியுறுத்தும் கதைகளாகவே அவை இருந்தன.

ஜப்பானியர் காலத்தில் (1942 - 1945) சிறுகதைத்துறையின் வளர்ச்சி குன்றினாலும் அது தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தது என்பதை மறுக்க முடியாது. அக்காலத்தில் வெளிவந்த சுதந்தர இந்தியா, யுவபாரதம், சுதந்திரோதயம், ஜயபாரதம், புது உலகம், உதய சூரியன் போன்ற பத்திரிகைகள் சிறுகதைக்கும் இடமளித்தன. அக்காலத்திய சிறுகதைகள் பொதுவாக இந்தியச் சுதந்திரத் தாகம், மதுவிலக்கு, காதல் ஆகியவற்றை முக்கியக் கருப்பொருள்களாகக் கொண்டிருந்தாலும், காமம், சாதி ஒழிப்பு, சினிமா, இந்தியர்களின் வாழ்க்கை முறை (வறுமை, வேலையின்மை, பிச்சை எடுத்தல் போன்றவை), கற்பு போன்றவற்றையும் கருப்பொருள்களாகக் கொண்டு படைக்கப்பட்டன. இருப்பினும், சிறுகதைகளில் தொடர்ந்து தமிழ்நாட்டுப் பின்னணியே களமாக அமைந்திருந்தது. பாத்திரப்படைப்பிலும் அவற்றில் அதிகமான கவனம் செலுத்தப்படவில்லை. ஆயினும், பெரும்பாலான சிறுகதைகள் மலேசியர்களின் படைப்புகளாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானியர் காலத்திற்குப் பின்னர் (1946 முதல் 1957 வரையில்) மலேசியாவில் வெளிவந்த ஏடுகளான மலாயா நண்பன், களஞ்சியம், ஐனநாயகம், தேசநேசன், தமிழ்ச்சுடர், சோலை, சேவிகா, முயற்சி, தமிழ்க்கொடி, முன்னேற்றம், நாகரிகம், சங்கமணி, தமிழோசை, திருமுகம், மலைமகள் ஆகியவை சிறுகதை இலக்கியத்திற்கென சில பக்கங்களை ஒதுக்கின. இருப்பினும், சங்கமணியைத் தவிர்த்து மற்றவற்றின் வாழ்நாள் குறுகி இருந்தமையால் சிறுகதைத்துறையில் அவற்றின் தாக்கம் அதிகமாக இல்லை. அதனால், தமிழ் நேசன், தமிழ் முரசு, சங்கமணி ஆகிய ஏடுகளே சிறுகதைக்கு அக்காலகட்டத்தில் அதிகமான பங்களிப்பைச் செய்தன. தமிழ் நேசனின் கதை வகுப்பு, தமிழ் முரசின் ரசனை வகுப்பு, எழுத்தாளர் பேரவை ஆகியவையும் மிக அதிகமான எழுத்தாளர்களைச் சிறுகதைகள் எழுதத் தூண்டின. கருப்பொருள்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பேராசை, சந்தேகம், தியாகம், துரோகம், கடன் தொல்லை, வறுமை, நேர்மை, ஜப்பானிய ஆதிக்ககாலத்துத் துயரங்கள், மதுவினால் ஏற்படும் தீமைகள், மலாய்ப்பெண்களைத் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாமை, வெளிநாட்டில் ஆங்கில ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் ஏற்பட்ட பண்பாட்டுச் சீர்குலைவு, பாரம்பரியக்கூறுகளை மீறுதல், வேலை நிறுத்தம், கம்யூனிஸ்டுகளின் பயமுறுத்தல்கள், பயங்கரவாதிகளை ஒழித்தல் போன்றவை கதைகளின் கருப்பொருள்களாகின.13 சங்கமணியும் உழைப்பின் மேன்மை, தோட்டப் பாட்டாளிகளின் உயர்வு, சங்கம் அமைத்தல் போன்ற கருப்பொருள்களை வலியுறுத்தியது. சிறுகதைகளின் அமைப்பு முறையிலும் அவற்றைச் சொல்லும் முறையிலும்கூட மாற்றங்கள் தெரிந்தன.

மலேசியச் சிறுகதைத்துறையின் மறுமலர்ச்சிக் காலமாக 1969 முதல் 1979 வரையுள்ள காலகட்டத்தைக் குறிப்பிடலாம். நாட்டின் பொதுத்தேர்தலும் (1969) அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட 'மே கலவரங்களும்' அதற்கு வித்திட்டன என்றும் கூறலாம். மலேசியச் சிறுகதை எழுத்தாளர்கள் சிறுகதையின் பயனைப் பற்றிய தங்களுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவும் இது வழிவகுத்தது. சமகாலப் பிரச்சினைகளான வறுமை, குடியுரிமை, வேலை பெர்மிட், வேலையில்லாத் திண்டாட்டம், குடியிருப்பு, பொதுவான சமுதாயச் சீர்கேடுகள், சுயநலம், பேராசை, தமிழ்ப்பள்ளிகள், அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்கள் ஆகியவற்றின் பாதிப்பை உணர்ந்த எழுத்தாளர்கள் அவற்றைத் தொட்டு எழுத ஆரம்பித்தனர். சிறுகதைகள் சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்னும் எண்ணமும் இக்காலகட்டத்தில் வலுவடைந்தது. உருவ அமைப்பு, உத்திமுறைகள் போன்றவற்றில் சிறுகதை மலேசிய வடிவத்தைக் கொள்ள ஆரம்பித்த காலகட்டமாகவும் இது திகழ்ந்தது.

எனினும், 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்ட சிறுகதைகள் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் அதற்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதைகளைவிட கருப்பொருள்களிலும் உத்தி முறைகளிலும் ஒரு படி உயர்ந்திருந்தன எனக் கொள்ளலாம். இக்காலகட்டத்தில் சமகாலச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் அதிகமாக வெளிவந்தன. மலாயாப் பல்கலைக் கழகத்தின் பேரவைக் கதைகளும் தேசியநிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் பரிசு பெற்ற படைப்புகள் (இரண்டு தொகுதிகள்) ஆகியவற்றை இவற்றைக் காட்டும் கண்ணாடிகளாகக் கருதலாம். கடந்த பன்னிரண்டு ஆண்டுக் காலத்தில் வந்த சிறுகதைத் தொகுப்புகளையும் இவற்றோடு இணைத்துக் கொள்ளலாமெனினும் அத்தொகுப்புகளுள் 1980ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதி வெளியிடப்பட்ட சிறுகதைகளும் அடங்கியிருக்கின்றமையால் அவற்றை முழுமையாகத் தற்காலக் கதைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. எனினும், பேரவைக் கதைகளில் தோட்டப்புற மக்களின் அறியாமை, அதிகாரவர்க்கத்தின் அடாவடித்தனம், முதியோர் பிரச்சினைகள் (பொதுவாக, பெற்றோரைப் பேணாத குழந்தைகள்), பொருளாதார வீழ்ச்சி, வீட்டுமனை விற்பதில் ஏமாற்றப்படுதல், வன்முறைக் கலாசாரம், ஆணாதிக்கப் போக்கு, தாய்மையின் சிறப்பு, இடைநிலைப்பள்ளி மாணவர்களின் தவறான நடத்தைகள், கல்வி, சொந்தத் தொழில், அரசியல் போன்ற கருப்பொருள்கள் மிக அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன. இறுதியாக வெளிவந்த பேரவைக் கதைகள் 21இன் கதைகளிலும் சமுதாயப் பிரச்சினைகள் அல்லது நடப்பு விவகாரங்களே கதைக்கருக்களாக ஆக்கப்பட்டுள்ளன. கல்வி, பள்ளித் தேர்வுகள் உண்டாக்கும் அச்சம், தாய்மொழி வகுப்புக்களை தமிழ் மாணவர்களே புறக்கணித்தல், கோயில், தமிழ்ப் பள்ளிகளில் ஏற்படும் பிரச்சினைகள், பெற்றோரைத் தவிக்க விடும் குழந்தைகள், கணவன் மனைவியரிடையே காணப்படுப் புரிந்துணர்வின்மை, பிற இனத்தவரை மணப்பதால் ஏற்படும் சிக்கல், மண்ணையும் மரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை, பொதுத்தொண்டு, ஆசிரியர் மாணவர் உறவு, போதைப்பித்தர்கள் திருந்தியும் அவர்களை ஏற்க மறுக்கும் சமுதாயம், அன்பிற்குரியவர்களின் மரணத்தினால் ஏற்படும் பாதிப்பு, தவறு செய்யும் பிள்ளைகளைத் திருத்துவதற்கான முறை ஆகிய கருப்பொருள்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் பரிசு பெற்ற படைப்புகளின் இரு தொகுதிகளிலும்கூட சமுதாயச் சிந்தினையைத் தூண்டும் கருப்பொருள்களே சிறுகதைகளில் மிகுதியாகக் கையாளப்பட்டன.

சிறுகதைத்துறையின் வளர்ச்சிக்கான முயற்சிகள்


மலேசியச் சிறுகதைத்துறை வளர்ந்து கொண்டிருக்கின்றதா நலிவடைந்து கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விகள் மலேசியத் தமிழிலக்கியத்தின் தரம் குறித்த சிந்தனையுடையவர்களின் மனத்தில் அடிக்கடி எழுந்து கொண்டிருந்தாலும் சிறுகதைத்துறையின் வளர்ச்சிக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. நாடளாவிய நிலையிலும் எழுத்தாளர் வாசகர் இயக்கங்களால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளாகவும் நடத்தப்படுகின்ற திறனாய்வுக் கருத்தரங்குகளும், சிறுகதைப் போட்டிகளும், எழுதப்பட்ட/எழுதப்படுகின்ற நூல்களும் கட்டுரைகளும் அவற்றுள் மிக முக்கியமானவை.

i. மலேசியச் சிறுகதைத் திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும்

<
மலேசியச் சிறுகதைகளின் தொடக்க காலம் தொட்டு இன்று வரையிலும்கூட சிறுகதைகளைப் பற்றிய தீவிரத் திறனாய்வு நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை என்பதே உண்மை நிலை. அவ்வப்போது வெளிவந்த திறனாய்வுக் கட்டுரைகளும் நடத்தப்பட்ட கருத்தரங்குகளும் வெளியிடப்பட்ட நூல்களும் இந்நாட்டுச் சிறுகதை இலக்கியத்தை முழுமையான ஓர் ஆய்வுக்குட்படுத்தியிருக்கின்றன என்றும் கூறுவதற்கில்லை. மா.இராமையாவால் மலைமகளில் ஜூன் 1959 முதல் பிப்ரவரி 1960 வரையில் எழுதப்பட்ட தமிழ் நேசனின் கதை வகுப்பு, எழுத்தாளர் பேரவை, தமிழ் முரசின் இலக்கிய விமர்சனம் போன்றவற்றைப் பற்றிய கட்டுரைகள், முருகு சுப்பிரமணியத்தின் பல கட்டுரைகள், ஆ. முருகையனால் சிங்கப்பூர்க் கருத்தரங்கு ஒன்றில் 1962இல் வாசிக்கப்பட்ட மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைள் என்னும் கட்டுரை, கவிஞர் டி.வி.ஆர். பார்வதி அவர்களால் தமிழ் மலர் நாளிதழில் 1968இல் எழுதப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளே இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தொடக்க கால முயற்சிகள் எனக் கொள்ளலாம்.


இவற்றைத் தவிர்த்து, சிறுகதைத் தொகுப்புகளுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளின் வழி மலேசியச் சிறுகதைத் திறனாய்வுத்துறைக்கு டாக்டர் மு.வரதராசன், அகிலன், டாக்டர் இராம சுப்பையா, டாக்டர் இரா. தண்டாயுதம், முருகு சுப்பிரமணியம், சி.வீ.குப்புசாமி, மு.சேதுராமன், நா. பார்த்தசாரதி, கனக செந்தில்நாதன், ரெ. கார்த்திகேசு ஆகியோரும் பங்களிப்புச் செய்துள்ளனர். தவிர, சை.பீர் முகம்மது, வி.ச. முத்தையா, ந.கோவிந்தன், ச.கமலநாதன், இரா.ந.வீரப்பன், காரைக்கிழார், டாக்டர் சண்முக சிவா ஆகியோரும் தமது கட்டுரைகளின் மூலம் மலேசியச் சிறுகதைகளைப் பற்றிய தமது கருத்துகளை அவ்வப்போது எழுதியுள்ளனர். ஆனால், திறனாய்வு நூல் என்று பார்க்கும்பொழுது கவிஞர் டி.வி.ஆர். பார்வதி அவர்களால் 1971இல் வெளியிடப்பட்ட 'தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கணம் வேண்டுமா?' என்னும் நூலே மலேசியத் தமிழ்ச் சிறுகதைத் திறனாய்வுத்துறையின் முன்னோடி நூல் என்று கருதலாம். உண்மையில் இந்நூல் கவிஞர் டி.வி.ஆர். பார்வதி அவர்களால் 1968இல் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே. எனினும், இந்நூலில் எட்டுச் சிறுகதைகளின் தரம், நயம் ஆகியன பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இஃது ஒரு முழுமையான திறனாய்வு நூலன்று. "கதைகளின் திறனாய்வைக் காட்டிலும் இலக்கண வழுக்களை எடுத்துக் காட்டுவதிலேயே ஆசிரியர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டுள்ளார்" என்று இந்நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள சி.வீ.குப்புசாமி அவர்களின் கூற்று இந்நூலின் தன்மையை நன்கு எடுத்துக் காட்டும்.  இதைத் தொடர்ந்து 1972இல் தமிழ் நேசனில் வெளிவந்த 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் இருபத்தைந்து ஆண்டுக்கால வளர்ச்சி' என்ற சி.வேலுசாமியின் கட்டுரையும் மலேசியத் தமிழ்ச் சிறுகதையின் தரம் பற்றிக் கோடி காட்டியது எனலாம். இருபத்தைந்து தொகுப்புகளைப் படித்த பின்னர் பதினைந்து சிறுகதைகள்கூட போதுமான தரத்தை அடையவில்லையென அவர் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாகப் பாலபாஸ்கரன் தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார். அகிலனும், 1975இல் தமிழ் நேசனில் எழுதிய தமது 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள்' என்னும் கட்டுரையில் மலேசிய எழுத்தாளர்கள் எதை எழுத வேண்டுமென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்களென்றாலும் எப்படி எழுத வேண்டுமென்பதை இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத் தக்கது.18 ஆயினும், இக்கருத்துகள் யாவும் மலேசியத் தமிழ்ச் சிறுகதையுலகில் அதுவரையிலும் சிறந்த சிறுகதைகளே வரவில்லை எனப் பொருள்படா. தற்காலத் தமிழ் இலக்கியம் (1973) என்னும் தமது நூலில், "எந்த மொழியிலும் மொழிபெயர்க்கத் தக்க சில நல்ல சிறுகதைகள் வெளிவந்துள்ளன" என்றும் அவற்றில் "புதிய புதிய கருப்பொருள்களையும் சொல்லும் முறைகளையும் காணலாம்" என்றும் "மண்ணின் மணம் கமழும் வட்டாரச் சிறுகதைகள்" அவை என்றும் குறிப்பிடும் டாக்டர் இரா.தண்டாயுதம் அந்த நல்ல சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர்களாகச் சி.வடிவேலு, ரெ.கார்த்திகேசு, மு.அன்புச்செல்வன், எம்.குமரன், சை.பீர் முகம்மது போன்றவர்களைக் குறிப்பிடுகிறார்.

இக்காலகட்டத்திற்குப் பின்னர் வெளிவந்த பாலபாஸ்கரனின் 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை' (1995), மா.இராமையாவின் 'மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்' (1996), ரெ.கார்த்திகேசுவின் 'விமர்சன முகம்' (2004), பாலபாஸ்கரனின் The Malaysian Tamil Short Stories 1930 -1980 A Critical Study (2006) ஆகியவையும் திறனாய்வுப் பார்வையில் சிறுகதைகளைப் பார்த்திருக்கின்றன. எனினும், இவற்றுள் பாலபாஸ்கரனின் 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை'யும், The Malaysian Tamil Short Stories 1930 -1980 A Critical Study' (2006) என்னும் இரண்டு நூல்களும் மட்டுமே முழுக்க முழுக்கச் சிறுகதைகளைப் பற்றியே பேசுகின்றன. மற்ற இரு நூல்களும் சிறுகதைகளைப் பற்றியனவல்ல என்பதற்கு அவற்றின் பெயர்களே சான்று பகரும். எனினும், அவற்றின் பெயர்களுக்கேற்ப ஆங்காங்கே மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் உள்ளடக்கம், தரம் போன்றவற்றைப் பற்றிய சில குறிப்புகளையும் கருத்துகளையும் அவை கொண்டுள்ளன என்பதில் ஐயமில்லை. 

"மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிப் பேசுகிறபோது அவற்றைப் பற்றிப் பெருமைப்படவும் அதற்கு எதிர்மாறாக வருத்தப்படவும் காரணங்கள் உண்டு. பெருமைப்படுவதற்கான முதல் காரணம் அவற்றின் உள்ளடக்கத்தின் அசல் தன்மை.... இப்போது ஆரம்ப எழுத்தாளர்கள் எழுதுகின்ற எழுத்தில்கூட இந்த நாட்டின் வாழ்க்கைதான் கருப்பொருளாகிறது."என ரெ.கார்த்திகேசு தமது 'விமர்சன முகத்தில்' குறிப்பிடுவார். 

ii. சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்குகள்


இந்தக் காலகட்டத்தில்தான் மலாயாப் பல்கலைக்கழக இந்தியல் ஆய்வியல் துறை 1978ஆம் ஆண்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிறுகதைக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்த இரண்டு நாள் கருத்தரங்கைச் சிறுகதைத்துறையின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சி என்றும் கூறலாம். மலேசியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட முதல் சிறுகதைக் கருத்தரங்கமாக இது அமைந்திருந்தது. அது வரையிலும் தேசிய அளவில் மலேசியத் தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டதில்லை. மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சி, அமைப்பு, கரு, சமுதாயப் பின்னணி, மலேசியச் சமுதாயம், மலாய், தமிழ்ச் சிறுகதைகளின் ஒப்பீடு என்பன பற்றிய ஏழு கட்டுரைகள் இக்கருத்தரங்கில் படைக்கப்பட்டன. 'மெர்டேக்காவிற்குமுன் மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி', 'மெர்டேக்காவிற்குப்பின் மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி', 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை அமைப்பு', 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் சமுதாயப் பின்னணி', 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் கருப்பொருள்கள்' என்னும் தலைப்புகளில் தமிழில் ஐந்து கட்டுரைகளும் மலாய்மொழியில் இரண்டு கட்டுரைகளும் படைக்கப்பட்டன. மலாய்மொழியில் படைக்கப்பட்ட கட்டுரைகளில் 'மலேசியாவில் மலாய், தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சி - ஓர் ஒப்பீடு' என்னும் தலைப்பில் படைக்கப்பட்ட கட்டுரையை ரெ.கார்த்திகேசுவும், 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் மலேசியச் சமுதாயம்' என்னும் கட்டுரையை ந.சுப்பிரமணியமும் (பாலபாஸ்கரன்) படைத்தனர். தமிழில் படைக்கப்பட்ட கட்டுரைகளை முறையே சி.வடிவேலு, பால பாஸ்கரன், டாக்டர் இரா.தண்டாயுதம், வி. பூபாலன், இராம வீரசிங்கம் ஆகியோர் படைத்தனர். முதன் முதலாக மலேசியச் சிறுகதைகளைப் பற்றிய ஒரு விரிவான ஆராய்ச்சியாக இக்கருத்தரங்கு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய அளவில் நடத்தப்பெற்ற மற்றொரு சிறுகதைக் கருத்தரங்காக 'மலேசியத் தமிழ்ச் சிறுகதையின் அடுத்த கட்ட வளர்ச்சி' என்னும் கருப்பொருளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2003இல் ஆகஸ்ட் 30, 31ஆம் தேதிகளில் கோலாலம்பூரிலுள்ள கிராண்ட பசிபிக் ஹோட்டலில் நடத்திய சிறுகதைப் பயிற்சிப் பட்டறையைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான திலீப்குமார் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு சிறுகதையின் போக்குகள் குறித்தும் அதன் இலக்கணம் குறித்தும் தமது கருத்துகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கின்போது 'விரகம் விகாரமல்ல' 'அனாக் பீசி பூரோக்' எனும் இரண்டு சிறுகதைகள் படிக்கப்பட்டு அவற்றைப் பற்றிய திறனாய்வும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்குப் பின்னர், தேசிய அளவில் சிறுகதைக்குக் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

எனினும், சிறுகதையை வளர்ப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுகதைத்துறையை மேம்படுத்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எடுத்து வந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுள் மாதாந்திரச் சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்கு மிக முக்கியமானது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதை வளர்ச்சிக்கான ஒரு முக்கியத் திட்டமாகவும் இதைக் குறிப்பிடலாம். ஆதி குமணன் அவர்கள் மலேசிய நண்பன் நாளேட்டின் ஆசிரியராகவும் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தபோது முதன் முதலாக இக்கருத்தரங்கு 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மலேசியாவில் அக்காலகட்டத்தில் வெளிவந்த எல்லாத் தமிழ் ஏடுகளிலும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்ட சிறுகதைகளையெல்லாம் திரட்டி அவற்றைத் திறனாய்வாளர் ஒருவரிடம் கொடுத்துச் சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பவுன் பரிசு வழங்கிச் சிறப்புச் செய்யும் திட்டம் இது. ஏறத்தாழ பத்தாண்டுகள் நடைபெற்ற இச்சிறுகதைக் கருத்தரங்குகள் நல்ல சிறுகதைகள் உருவாக எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து வந்துள்ளன. இவற்றிற்கான பவுன் பரிசுகளை பத்து பகாட் நகைக்கடை, பிறை மீனாட்சி நகைக்கடை ஆகியவற்றின் உரிமையாளர்கள் கொடுத்துதவினர். கிடைக்கப்பெற்ற குறிப்புகள் இதனுடைய 36வது சிறுகதைக் கருத்தரங்கு 20.7.1997 இல் கிள்ளானிலுள்ள குணா கிளினிக் மண்டபத்தில் நடைபெற்றுள்ளதையும், 7.5.2002இல் மீண்டும் ஒருமுறை கிள்ளானிலுள்ள பாரதமாதா உணவக மண்டபத்தில் நடைபெற்றுள்ளதையும் இதன் 98வது கருத்தரங்கு 2.3.2003இல் மலேசிய நண்பன் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதையும் காட்டுகின்றன. இக்கருத்தரங்குகள் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றுள்ளன. இக்கருத்தரங்குகளில் பரிசு பெற்ற சிறுகதைகள் நம் நாட்டுச் சிறுகதையின் வளர்ச்சியைப் பற்றிய தகவல்களை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன எனலாம். ஜூலை, 2003 முதல் பிப்ரவரி, 2004 வரை நடைபெற்ற சிறுகதைக் கருத்தரங்குகளில் டாக்டர் ரெ.கார்த்திகேசு, துளசி அண்ணாமலை, டாக்டர் சண்முக சிவா, கல்யாணி மணியம், பி.சுபத்திராதேவி, மா.இராமையா, ஏ.தேவராஜன், ந.மகேஸ்வரி ஆகியோர் பவுன் பரிசைப் பெற்றிருக்கின்றனர். இக்கருத்தரங்குகளில் அதிகமான மூத்த எழுத்தாளர்களின் கதைகளே பரிசுகளைப் பெற்றிருக்கின்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறை எழுத்தாளர்களின் கதைகள் மூத்த எழுத்தாளர்களின் கதைகளோடு போட்டி போடும் அளவுக்கு இன்னும் வளர்ச்சி பெறவில்லையென்பதையும் இது ஓரளவுக்குக் கோடி காட்டுகின்றது என்று கூறுவது தவறாகாது. 

எனினும், இக்கருத்தரங்கை ஆண்டுக்கொரு முறை இரண்டு நாள் மாநாடாக நடத்துவதென சங்கம் முடிவெடுத்ததால் 2004க்குப் பிறகு இச்சிறுகதைக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்படவில்லை. இதற்குச் சரியான காரணம் தெரியவில்லையாயினும் மாதம் ஒருமுறை நடைபெறும் இந்தத் திறனாய்வுக் கருத்தரங்குகளுக்குச் சிறுகதை எழுத்தாளர்கள் அதிகமாகக் கலந்து கொள்ளாமற் போனதே முக்கியக் காரணம் எனலாம். சில சமயங்களில் சிறுகதைகளைத் திறனாய்வு செய்து கட்டுரை படைப்பவரைத் தவிர்த்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் மட்டுமே இக்கருத்தரங்குகளில் கலந்து கொண்ட நிலைமையும் உண்டு.

பொதுவாக, தொடக்கத்தில் இந்தத் திறனாய்வுக் கூட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றனவாயினும் பின்னர் எழுத்தாளர்களை அதிகமாக ஈர்க்கவில்லை. சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதைவிடப் பரிசுக்குரியனவாகப் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு சிறுகதைகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு நிகழ்ச்சியாக அது திசை மாறிவிட்டதே காரணம் எனலாம். அது மட்டுமன்று. தொடக்கத்தில் திறனாய்வுக் கூட்டங்களின்போது வாசிக்கப்பட்ட கட்டுரைகள் மலேசிய நண்பனில் வெளியிடப்பட்டன. மலேசியாவில் உள்ள எழுத்தாளர்கள் அவற்றை வாசிப்பதன்வழி சிறுகதைகளைப் பற்றிய திறனாய்வாளரின் கருத்துகளை அறிந்துகொள்ளவும் சிறுகதைகளைப் பற்றிய சில நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், பின்னர் அக்கட்டுரைகள் எதுவுமே பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை. இதற்கான காரணம் சரியாகத் தெரியாவிட்டாலும் இதனால் ஏற்பட்ட இழப்பு அதிகமே. மலேசியச் சிறுகதைத்துறை மட்டுமல்லாது திறனாய்வுத்துறையும் இதனால் வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது.

மலேசிய நண்பன் நாளேடு இன்று இத்தகைய முயற்சி ஒன்றை மேற்கொண்டே வருகின்றது. ஆனால், சற்று மாற்றத்துடன் இத்திறனாய்வுக் கருத்தரங்குகளை அது தற்பொழுது நடத்தி வருகின்றது. மலேசிய நண்பனில் வெளிவந்த சிறுகதைகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு மூன்று மாதங்களுக்கொரு முறை நாட்டின் வெவ்வேறு இடங்களில் இச்சிறுகதைக் கருத்தரங்குகளை நடத்தி மூன்று மாதங்களில் வெளிவந்த கதைகளிலிருந்து மூன்றைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசாக 300 ரிங்கிட்டும் இரண்டாம் பரிசாக 200 ரிங்கிட்டும் மூன்றாம் பரிசாக 100 ரிங்கிட்டும் அளித்து வருகின்றது. சிறுகதைக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரையைப் பத்திரிகையிலும் வெளியிட்டு வருகின்றது. திறனாய்வுக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்படும் நிறைகளும் குறைகளும் எழுத்தாளர்களுக்குச் சிறந்த சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டுமென்பதை ஓரளவுக்கேனும் அடையாளம் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. மலேசியாவின்மூத்த நாளேடான தமிழ் நேசனும் தன் பங்குக்கு அவ்வப்போது சிறுகதைக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தனது முதலாவது மலேசியத் தமிழ் இலக்கிய மாநாட்டை 2005, பிப்ரவரி 19, 20இல் நடத்தியபோது மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இதில் படைக்கப்பட்டன. 'அண்மைய கால மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சியும் போக்கும்' என்னும் தலைப்பில் ந.மகேஸ்வரியும் 'மலேசியத் தமிழ்ச் சிறுகதை: தொடக்கம் முதல் தொண்ணூறு வரை' என்னும் தலைப்பில் சோ.சுப்பிரமணியும் கட்டுரைகள் படைத்தனர். மலேசியச் சிறுகதையின் வரலாறு, மலேசியச் சிறுகதைகளின் தரம், மலேசியச் சிறுகதைகளில் காணப்படும் குறைபாடுகள், மலேசியச் சிறுகதை வளர்ச்சிக்கு அடுத்த கட்ட நடவடிக்கை போன்ற கருத்துகளை இக்கட்டுரைகள் கொண்டிருந்தன. சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்குகள் வெறும் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக அமையாமல் சிறுகதைகளின் நுணுக்கங்களை இளம் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ளும் ஒரு களமாக அமைய வேண்டும் என்னும் கருத்துகளும் இக்கட்டுரைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

iii. சிறுகதைப் போட்டிகள்


மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக்குச் சிறுகதைப் போட்டிகளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. பன்னெடுங்காலமாக எழுதி எழுதிக் களைத்துப் போன மிக நல்ல எழுத்தாளர்களை இன்றும் சிறுகதையைப் படைக்கத் தூண்டுகோலாக இருப்பவை சிறுகதைப் போட்டிகளே என்பதில் ஐயமில்லை.

எனினும், சிறுகதைப் போட்டிகளுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. முதல் சிறுகதைப் போட்டியை அறிமுகப்படுத்திய பெருமை பாரதமித்திரன் என்னும் வாரப் பத்திரிகையையே சாரும். 1934இல் (20.7.1934) தோற்றம் கண்ட வார இதழான பாரதமித்திரன் அவ்வாண்டின் செப்டம்பர் மாதத்திலேயே (14.9.1934) சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டது. பாரதமித்திரன் சந்தாதாரர்களுக்கான சிறுகதைப் போட்டியாக இது நடத்தப்பட்டாலும் போட்டிக்கான நிபந்தனைகளுள் ஒன்று உன்னிப்பாகக் கவனிக்கத் தக்கது. "கதைகள் இன்றைய சமூக நிலையை விளக்கத்தக்கனவாகயிருக்க வேண்டும்"  என்பதே அது. மலேசியாவிலிருந்து இது வெளிவந்ததால் மலேசிய இந்தியர்களின் சமூக நிலையை அல்லது குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தின் நிலையைக் கதைகள் விளக்க வேண்டும் என்று அந்த நிபந்தனையைப் பற்றி எண்ணங் கொள்ள இடம் இருக்கின்றதெனினும் பாரதமித்திரனின் நோக்கம் அதுவன்று என்பது போட்டியில் பரிசு ($5.00) பெற்ற சிங்கப்பூர் ந.பழனிவேலின் 'கிராமக்காட்சி' என்னும் கதை உறுதி செய்கின்றது. முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டுச் சூழலிலேயே படைக்கப்பட்ட சிறுகதை இது.

ஐனவர்த்தமானியும் அதன் பின்னர் 15.11.1933இல் மாணவ மாணவிகளுக்கான சிறுகதைப் பரிசுப்போட்டி ஒன்றை அறிவித்தது. ஆனால், இப்பரிசுப் போட்டியின்கீழ் வெளியிடப்பட்ட கதைகளைச் சிறிய கதைகள் என்னும் வட்டத்துக்குள் அடக்க முடியுமேயன்றி சிறுகதை என்ற இலக்கியத்தின்கீழ் கொண்டு வருதல் இயலாது. ஏறத்தாழ இரண்டாண்டுகள் இவ்வகைக் கதைகளை (ஒரே பத்திக் கதைகள்) இவ்வேடு வெளியிட்டது. 

தமிழ்ச்சுடர் என்ற ஏடும் சிறுகதைப் போட்டியொன்றனை 1948இல் நடத்தியது. பரிசுத்தொகையாக RM25.00 அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் முரசும் 1950லிருந்து சிறுகதைப்போட்டியை நடத்திச் சிறந்த கதை ஒன்றுக்குப் 10.00 ரிங்கிட் பரிசளித்தது.
மலேசியா (மலாயா) சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சிறுகதைக்கான போட்டிகள் அதிகமாகவே நடத்தப்பட்டன. தமிழ் நேசன் 1959இல் போட்டி ஒன்றை நடத்தி பரிசளிப்பு விழாவையும் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. தமிழ் முரசும் 1965இல் எட்டு முறை தங்க நாணயப் பரிசுப் போட்டியை நடத்தியது. அதைத் தொடர்ந்து மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் 1967-1968 இல் போட்டிகள் நடத்தியது. தமிழ் இளைஞர் மணி மன்றமும் தனது பங்களிப்பாக 1966இல் சிறுகதைப்போட்டி ஒன்றை நடத்தியது.

மலேசியச் சிறுகதைத்துறை வளர்ச்சியில் தமிழ் நேசனின் பங்களிப்புக்குச் சிறப்பிடம் உண்டு. முன்பே அது சிறுகதைப்போட்டியை நடத்தியிருந்தாலும் சிறுகதைத்துறையை வளர்க்க அது நடத்திய பவுன் பரிசுப் போட்டி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஜூன் 1972 முதல் ஜூன் 1976 வரை நடத்தப்பட்ட இப்போட்டி நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருபது மாதங்கள் நடைபெற்ற முதல் கட்டப் போட்டியில் தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் ஒவ்வொரு மாதமும் வெளிவந்த சிறுகதைகளை 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவொன்று ஆய்வு செய்து ஒரு சிறந்த கதை ஒன்றை எழுதிய எழுத்தாளருக்கு 8 கிராம் தங்க நாணயம் அளித்துச் சிறப்புச் செய்தது. இக்கதைகளுள் 12 சிறுகதைகள் பின்னர் தொகுக்கப்பெற்று பவுன் பரிசுக் கதைகள் என்னும் பெயரில் 1974இல் வெளியிடப்பட்டன. அதன் பின்னர், பெப்ரவரி 1974 முதல் செப்டம்பர் 1974 வரை நடைபெற்ற இரண்டாம் கட்டப் போட்டியில் இரண்டு மாதங்களுக்கொரு முறை சிறந்த சிறுகதை ஒன்றுக்கு ஒரு பவுன் பரிசளித்தது. அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாம் கட்டப் போட்டிக்கும் நான்காம் கட்டப் போட்டிக்கும் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசைப் பணமாகத் தந்து அவர்களின் மனத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழத்தியது. 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தமிழ் நேசனின் அடியொட்டி நவம்பர் 1972இல் சிறுகதைப் போட்டி ஒன்றைத் தொடங்கியது. 1972 நவம்பர்த் திங்கள் முதல் 1973 டிசம்பர்த் திங்கள் வரை பல்வேறு ஏடுகளில் வெளிவந்த கதைகளிலிருந்து திங்கள் தோறும் நடத்தப்பட்ட திறனாய்வுக் கருத்தரங்குகளில் திங்களுக்கு ஒரு சிறுகதையெனத் தேர்ந்தெடுந்து அவற்றை எழுதிய எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் RM50.00 ரிங்கிட் பரிசளித்துச் சிறப்புச் செய்தது. இக்கதைகள் யாவும் பின்னர் தொகுக்கப்பெற்றுப் 'பரிசு' என்னும் தலைப்பில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1974இல் வெளியிட்டது. இத்தொகுப்பில் பதினான்கு சிறந்த சிறுகதைகள் அடங்கியுள்ளன. மீனா நடராஜா, ரெ.கார்த்திகேசு, ஆ.சாரதா, சாமி மூர்த்தி, சுமதி தங்கராஜ், த.ப.இலட்சுமணன், சக்கரவர்த்தி சுப்பிரமணியன், ஐ.இளவழகு, சி.வடிவேல், மா.சுப்பிரமணியம், மா.இராமையா, இரா.ச. இளமுருகு, துளசி, நாடோடி ஆகியோர் அவற்றை எழுதியிருந்தனர். அதன் பின்னர் 1978இல் பரிசு பெற்ற சிறுகதைகளைக் கொண்ட 'புதையல்' என்னும் மற்றொரு தொகுப்பையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அதனுடைய வெள்ளி விழாவை முன்னிட்டு இலக்கியப் போட்டி ஒன்றனையும் 1988இல் நடத்தியது. சிறுகதைக்காக நடத்தப்பட்ட போட்டியில் ப.அ.அப்துல் ரசீது, வே.இராஜேஸ்வரி, மைதீ. சுல்தான் ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் மூன்றாம் பரிசுகளைப் பெற்றனர். பின்னர், பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுச் சிறுகதைப் போட்டி ஒன்றையும் 1990இல் நடத்திப் பரிசு பெற்ற சிறுகதைகளைத் தொகுத்துக் கலைகின்ற கருமேகங்கள் என்று தலைப்பில் 1993இல் வெளியிட்டது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இப்பணி அதற்குப் பின்னரும் தொடர்ந்தது. சமுதாயக் கதைகள் என்னும் தலைப்பில் மலேசிய நண்பனில் வெளிவந்த கடிகாரக் கதைகளின் தொகுப்பை 1999இல் வெளியிட்டது. எனினும், இது போட்டியாக நடத்தப்படவில்லை. மலேசிய நாட்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் எனப் பெயர் பெற்ற எம்.ஏ.இளஞ்செல்வன், மு.அன்புச்செல்வன், சை.பீர் முகம்மது, கோ.புண்ணியவான், ஆர்.சண்முகம், பாவை, ரெ.கார்த்திகேசு, மெ.அறிவானந்தன், நிர்மலா இராகவன், டாக்டர் மா.சண்முகசிவா, மா.இராமையா, ப.சந்திரகாந்தம், ஆதிலட்சுமி என்னும் 13 எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்ட சிறுகதைகளை ஒவ்வொரு வாரமும் அதனுடைய ஞாயிறு பதிப்பில் வெளியிட்டுப் பின்னர் அவற்றைச் சமுதாயக் கதைகள் என்னும் பெயரில் தொகுப்பாக வெளியிட்டது. 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மட்டுமல்லாது,  மாநில/வட்டார எழுத்தாளர் வாசகர் அமைப்புகளும் தம் பங்குக்கு அவ்வப்போது சிறுகதைப் போட்டிகளை நடத்தியுள்ளன. வேறு சில அமைப்புகளும் சிறுகதை வளர்ச்சிக்கான கருத்தரங்குகள், சிறுகதைத் தொகுப்பு வெளியீடுகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றன. கோலாலம்பூர் தமிழ் இளைஞர் மணிமன்றம், பத்து கேவ்ஸ் வாசகர் வட்டம், கெடா மாநில எழுத்தாளர் சங்கம், கிள்ளான் மாவட்ட வாசகர் இயக்கம், மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்பாளர் சங்கம், தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம், செபராங் பிறை தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம்,  பூச்சோங் வாசகர் வட்டம்,  உமா பதிப்பகம், செம்பருத்தி பப்ளிகேஷன் போன்றவை அவற்றுள் சில. கெடா மாநில எழுத்தாளர் சங்கம் வ.முனியன் அதன் தலைவராக இருந்தபோது சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி 1980இல் "ஊமைக்காயங்கள்" என்னும் சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிட்டது. எனினும், அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே 1972இல் கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கம் "பட்டினிக்குருவி" என்னும் சிறுகதைத் தொகுப்பொன்றை எம்.ஏ. இளஞ்செல்வன் தலைவராகவும், எ.மு.சகா செயலாளராகவும் பொறுப்பேற்றிருந்த காலத்தில் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து, ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னர் கோ.புண்ணியவான இவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தபொழுது "நிறங்கள்" (2001) என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளியீடு கண்டுள்ளது. 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவையும் மாநிலங்கள் தோறும் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளின்வழி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து எழுத்தாளர் பேரவைக் கதைகள் என்னும் தலைப்பில் அதனுடைய ஆறாவது தேசிய மாநாட்டில் (11.9.1994) வெளியிட்டது. அ.ரெங்கசாமி, சரஸ்வதி அரிகிருஷ்ணன், பி.கோவிந்தசாமி, ஆரியமாலா குணசுந்தரம், சுங்கை ஜாவி சுப்பிரமணியம், எம்.ஜெயலட்சுமி, செல்வராணி இராமநாதன், என்.துளசி, சத்தியா, பாவை, பத்மாதேவி, வே.செல்லையா, மா.இராமையா, வீ.கோவி.மணாளன், பத்மா, நாணல், நாகராணி செல்லையா, ஜனகா சுந்தரம், ந.அனந்தராஜ், ஜீரா, கா.மாரியப்பன், அமுத இளம்பரிதி, சீமா. இளங்கோ ஆகியோர் அத்தொகுப்பிலுள்ள கதைகளை எழுதியிருந்தனர்.

மலேசியச் சிறுகதைத்துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ள மற்றோர் இயக்கம் டத்தின்ஸ்ரீ இந்திராணி சாமிவேலு அவர்களின் தலைமையில் இயங்கி வரும் மலேசியப் பாரதிதாசன் இயக்கமாகும். அது 1993ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர் தின விழாவுக்காகக் கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்துச் சிறப்புச் செய்துள்ளது. தவிர, சிறந்த படைப்பிலக்கியமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நூல் ஒன்றுக்கு ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவின் பெற்றோர்களான சங்கிலிமுத்து - அங்கம்மா இலக்கிய விருதையும் (5000.00 ரிங்கிட்) வழங்கி எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தி வருகிறது.

சிறுகதைப் போட்டிகளின் மூலம் சிறுகதைத்துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் ஒரு நிறுவனம் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமைகள் இருக்க முடியாது. தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம் ஓர் இலக்கிய அமைப்பன்று. எனினும், இலக்கியத்துக்கு அது ஆற்றி வரும் பங்கும் அளப்பரிது. 1994ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சிறுகதைப் போட்டிகளை நடத்திப் பரிசளித்து எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுடன் பரிசு பெற்ற படைப்புகளைத் தொகுத்து இதுவரையிலும் இரண்டு தொகுப்புகளை வெளியிட்டு அவற்றை இலவசமாகவே எல்லாருக்கும் கொடுத்துள்ளது. இந்நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் 1994இல் மு.அன்புச்செல்வன், ஆதிலட்சுமி, ஆர்.சண்முகம் ஆகியோரும், 1995இல் காசிதாசன், எம்.இராமகிருஷ்ணன், நாணல் ஆகியோரும், 1996இல் கண்மணி கிருஷ்ணன், வே.தங்கமணி, வேலன் செல்லையா ஆகியோரும், 1997இல் மு. அன்புச்செல்வன், மா. இராமகிருஷ்ணன் ஆகியோரும், 1998இல் கா.இளமணி, சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான ஆகியோரும், 1999இல் எ.அன்பழகன், சு.கமலா, K. பன்னீர்செல்வம் ஆகியோரும், 2000இல் A. புஷ்பவள்ளி (பாவை), மு.மணிமாலா, கி.சுப்பிரமணியம் ஆகியோரும், 2001இல் மு.கருணாகரன், கா.ஆறுமுகம், சு.பார்வதி ஆகியோரும், 2002இல் வ.முனியன், ப.முகுந்தன், சந்திரா அர்ஜுனன் ஆகியோரும் பரிசுகள் பெற்றுள்ளனர். 

இந்நிறுவனம் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்காகவும் சிறுகதைப் போட்டிகளை நடத்திப் பரிசுகள் அளித்து வருகின்றது. மாணவர்களுக்கான அப்போட்டி 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு வரையிலும் சு.பொன்னழகி, திருமாமணி சுந்தரராஜ், மு.முனியம்மாள், ஹமிதா பிந்தி அப்துல் காதர், ஆ.குணநாதன், மு.பக்ருதின், சு.பாலு, கோ.திலகவதி ஆகியோர் பரிசுகள் பெற்றுள்ளனர்.  

ஒவ்வோராண்டும் சிறுகதைக்கான போட்டிகள் மட்டுமல்லாது கவிதை, கட்டுரைகளுக்கான போட்டிகளையும் நடத்தித் தொகுப்புகள் வெளியிட்டு வரும் மற்றோர் இயக்கம் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்தியப் பிரதிநிதித்துவ சபையாகும். உயர்கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்காக 1997 முதல் நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில் வெற்றிபெறும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை தொடர்ந்து இவ்வியக்கத்தின் தொகுப்புகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுள் எத்தனை பேர் தொடர்ந்து எழுதிச் சிறுகதைத்துறைக்கு வளம் சேர்ப்பர் என்பதற்கு இப்பொழுது பதிலளிப்பது கடினமே. எனினும், எதற்கும் ஒரு தொடக்கம் இருக்க வேண்டும். அத்தொடக்கத்தை஠ இந்தப் போட்டிகள் கொடுத்து வருகின்றன என்பதில் ஐயமில்லை. 

மலேசியத் தமிழ்ச் சிறுகதையைப் பற்றிய வரலாற்றில் மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை நடத்தி வரும் சிறுகதைப் போட்டியைக் குறிப்பிடாவிட்டால் வரலாறு முழுமை பெறாது என்று உறுதியாகக் கூறலாம். இந்நாட்டில் சிறுகதை எழுத்தாளர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்காக நடத்தப்படும் மூன்று இயக்கங்களின் போட்டிகளுள் இதுவே காலத்தால் மூத்தது. 1985இல் இப்போட்டி தொடங்கினாலும் பேரவைக் கதைகள் ஒன்று என்னும் பெயரில் அதற்கு அடுத்த ஆண்டில்தான் இப்போட்டி பெயர் பெற்றது. நாட்டிலுள்ள பழைய, புதிய எழுத்தாளர்கள் அனைவரும் சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய திறமைகளைக் காட்டும் ஒரு களமாகவும் இப்போட்டி நடைபெற்று வருகின்றது எனக் கூறினும் தவறாகாது. பரிசு பெற்ற படைப்புகளின் தொகுப்பாக இதுவரையிலும் 21 தொகுப்புகள் வெளிவந்து விட்டன. இந்த நாட்டுள் சிறுகதை எழுத்தாளர்களின் திறமைகளைக் காட்டும் ஒரு கண்ணாடியாகவும் இத்தொகுப்புகளை நினைத்துப் பார்க்க முடியும். மலேசியாவில் சிறுகதைத்துறையோடு இணைத்துப் பேசப்படுவதற்குப் பொருத்தமான ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களுமே இப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளனர் என்று கூறலாம். தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தைப் போன்று இதுவும் சில காலமாக மாணவர்களுக்கான போட்டிகளையும் நடத்திப் பரிசளித்து வருகின்றது. இறுதியாக, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற 21ஆம் பேரவைக் கதைகள் போட்டியில் இளம்பூரணன், வ.முனியன், கு.கிருஷ்ணன் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். நிலாவண்ணன், எஸ்.ஜீவனாமணி, எஸ்.அருணாசலம், ஆ.நாகப்பன், சாமி மூர்த்தி, ப.அடைக்கலம், எம்.ஜெயபாலன், ப.முகுந்தன், உதயகுமார் ஆகியோர் ஆறுதல் பரிசுகள் அளிக்கப் பெற்றனர். மாணவர் பிரிவுக்கான போட்டியில் கே.பாலமுருகன் முதல் பரிசையும், மு.சுந்தரேஸ்வரன் இரண்டாம் பரிசையும், ந.மகேந்திரன் மூன்றாம் பரிசையும், சு.மாரிமுத்து, மு.மல்லிகா, மு.தினகரன், செ.யுகமலர், கு.மனீஸ்வரன், இரா.பாலமுரளி, ப.செந்தாமரை ஆகியோர் ஆறுதல் பரிசுகளையும் வென்றனர்.

iv. மொழி பெயர்ப்புச் சிறுகதைகள்

மலேசியா பல இனங்களையும் பல மொழிகளைப் பேசுவோரையும் கொண்ட நாடு. குறிப்பாக இந்நாட்டு மக்கள் மலாய்மொழி, சீனமொழி, தமிழ்மொழி ஆகியவற்றோடு ஆங்கிலத்தையும் மிக அதிகமாகத் தங்களுடைய பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மொழிகளில் இலக்கியங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் அதிகமாகப் படைக்கப்படுகின்றனவா என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும், தமிழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்குச் சில சான்றுகள் உண்டு.

மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் 1989ஆம் ஆண்டில் டேவான் பகாசா டான் புஸ்தகா (மொழி வளர்ப்பு நிறுவனம்) திட்டத்தின்கீழ்ச் சில மலாய்க் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அன்வார் ரிட்சுவானின் (Anwar Ridhwan) 'சாசாரான்' (Sasaran), 'சகாபாட்' (Sahabat) என்னும் இரு கதைகளையும், ரசாக் மாமாட்டின் (Razak Mamat) 'டி லுவார் கூரோங்ஙான்' (Di Luar Kurungan) என்னும் கதையையும், சுரினா ஹசானின் (Zurinah Hassan) 'நேனேக்' (Nenek) என்னும் கதையையும், அஸிஸி அப்துல்லாவின் (Azizi Abdullah) 'திருச்செல்வம்' (Thiruchelvam) என்னும் கதையையும் மொழி பெயர்த்திருக்கிறார். இக்கதைகளுள் சாசாரான்- 'குறி' என்னும் தலைப்பிலும், "டி லுவார் கூரோங்ஙான்" 'கூண்டுக்கு வெளியே' என்னும் தலைப்பிலும், திருச்செல்வம் அதே தலைப்பிலும் தமிழ் நேசனில் வெளியிடப்பட்டன. மற்ற இரு கதைகளுள் "சகாபாட்," 'நண்பன்' என்னும் தலைப்பில் மயில் இதழிலும், "நேனேக்" 'பாட்டி' என்னும் தலைப்பில் தினமணியிலும் பிரசுரிக்கப்பட்டன.

இவை தவிர, தேசியமொழிச் சிறுகதைத் தொகுப்பான 'சிந்தா ஜமுனா' (Cinta Jamuna)30 என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்று ‘யமுனையின் காதல்’ என்னும் தலைப்பில் தமிழில் வெளியீடு கண்டுள்ளது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட எட்டு மலாய்ச் சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. 'நான் ஹீரோவா? சொன்னவர் யார்?', 'மாயை', 'காக்கை', 'யமுனையின் காதல்', 'அழிப்பு', 'சக்கர நாற்காலிப் பெண்', 'ஏக்கம்', 'பனி நேரக் கனவு' என்னும் தலைப்புகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு நூலாக்கம் கண்டுள்ளன. ஆனால், அச்சிறுகதைத் தொகுப்பின் மிகப் பெரிய குறைபாடு அவற்றை மொழி பெயர்த்தவரின் பெயர் குறிப்பிடப்படாமலே அச்சேறியிருப்பதுதான். அது மட்டுமன்று. பதிப்பாண்டு, பதிப்பகத்தின் பெயர், பிரதிகள், உரிமை, விலை போன்ற பல தகவல்களையும் இது கொண்டிருக்கவில்லை. ஆயினும், முகவுரையையும் நன்றியுரையையும் கொண்டு இத்தொகுப்பைக் 'கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கம்' வெளியிட்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளுக்குச் சொந்தக்காரரான அமிடா @ ஹமிடா ஹாஜி அப்டுல் ஹமிட் (அனிஸ்) என்பவரின் முன்னுரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் அடிப்பகுதியில் 25 ஜனவரி 2000 என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இத்தொகுப்பு நிச்சயமாக அதற்குப் பின்னரே வெளியிடப்பட்டிருக்கின்றது என்று முடிவெடுப்பதில் தவறொன்றுமில்லை. எனினும், இத்தொகுப்பைப் பற்றிச் சொல்லாவிடில் மொழிபெயர்ப்புச் சிறுகதை இலக்கியம் ஒன்று படைக்கப்பட்ட தகவல் வெளிப்படாமலே போய்விடக்கூடும் என்னும் ஓர் ஆதங்கம் ஏற்படுகின்றது. மேலும், இதைத் தமிழில் மொழிபெயர்த்தவரின் பெயரைச் சொல்லியே ஆகவேண்டும் என்னும் உணர்ச்சித் தூண்டலும் ஒரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. முகவுரை/நன்றியுரை, முன்னுரை, பொருளடக்கம் நீங்கலாக 83 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இச்சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இக்கட்டுரையின் ஆசிரியர் வ.முனியன் ஆவார்.

இதைத் தவிர்த்து, மலாயாப் பல்கலைக் கழகத்தில் தற்காலத் தமிழிலக்கியம் கற்பித்து வந்த இரா.தண்டாயுதம் அவர்களின் முயற்சியால் 1984ஆம் ஆண்டில் 'டேவான் சாஸ்த்ரா'  என்னும் மலாய்மொழி இதழில் ஒவ்வொரு மாதமும் மலேசியத் தமிழ் ஏடுகளில் வெளிவந்த கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் போன்றவற்றைப் பற்றிய மலாய்மொழிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. டாக்டர் இரா.தண்டாயுதம் இவற்றைத் தமிழில் எழுதியிருந்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய திரு. ப. பழனியப்பனும் இந்தியப் பகுதியின் தலைவராக இருந்த஠ டாக்டர் ச. சிங்காரவேலுவும் இவற்றை மலாய்மொழியில் மொழிபெயர்த்திருந்தனர். இக்கட்டுரைகள் ஒவ்வொரு மாதமும் தமிழ் நாளேடுகளில் வெளிவந்த சிறுகதைகளின் கருப்பொருள்கள் பற்றியே அதிகமாகப் பேசின. பொதுவாக, அக்காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட சிக்கல்களான சிவப்பு அடையாள அட்டை, கல்வி, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், குடும்பம், தமிழர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, சம்சு என்னும் அரக்கனால் ஏற்பட்ட சீரழிவு, தோட்டப்புறச் சமுதாயம் போன்ற சமகாலப் பிரச்சினைகளையே அவை கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. எனினும், இக்கட்டுரைகளில் சிறுகதைகளின் தரம், உத்திகள் போன்றவற்றைப் பற்றி அதிகமாகக் காணமுடியவில்லை. எனவே, தேசியமொழி இலக்கியப் படைப்பாளர்களுக்கு தமிழிலக்கியம் என்ற ஒன்று இந்நாட்டில் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டும் ஒரு முயற்சியாகவே இதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

மொழிபெயர்ப்புத்துறையில், தமிழிலிருந்து தேசியமொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட சிறுகதைகளும் அதிகம் இல்லையென்றே கூறவேண்டும். த.மு.அன்னமேரியின் சிறுகதைத் தொகுப்பொன்று 'வனித்தா மாலாங்' (Wanita Malang) என்னும் தலைப்பில் ஜி.சூசை அவர்களால் தமிழிலிருந்து தேசியமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தவிர, சி.வடிவேலு தம்முடைய 'புதிய வாரிசு' என்னும் சிறுகதைத் தொகுப்பில் ஆ.நாகப்பன் தேசியமொழியில் மொழிபெயர்த்த தம்முடைய மூன்று சிறுகதைகளை இணைத்துள்ளார். மலாயாப் பல்கலைக் கழகம் வெளியிட்ட 'Koleksi Cerpen-Cerpen Malaysia' என்னும் தொகுப்பிலும் தமிழிலிருந்து தேசியமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட நான்கு சிறுகதைகள் அடங்கியுள்ளன. தேவகிமணாளனின் 'நேர் கோடுகள்', மு.அன்புச்செல்வனின் 'அட்டைகள்', ரெ.கார்த்திகேசுவின் 'டத்தோ கண்ணப்பன்', சி.வடிவேலுவின் 'முத்துசாமிக் கிழவன்' ஆகியவையே அவை. இவற்றைப் ப. பழனியப்பன்஠ 'Garisan Selari', 'Lintah Darat', 'Dato Kannappan', 'Orang Tua Muthusamy' என்னும் தலைப்புகளில் மொழிபெயர்த்திருந்தார்.

சுருங்கக் கூறுவதானால், மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகில் தமிழிலிருந்து தேசியமொழிக்கோ ஆங்கிலத்துக்கோ மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளோ தேசியமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட சிறுகதைகளோ அதிகம் இல்லை எனலாம். எனினும், தற்காலத்தில் மலாய்மொழியிலும் தமிழிலும் தெளிவாக எழுதக்கூடிய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் இருப்பதால் இந்தத் துறையில் அதிகமான முயற்சிகள் வருங்காலத்தில் மேற்கொள்ளப்படலாம்; மேற்கொள்ளப்படவும் வேண்டும். குறிப்பாக, தமிழ்ச் சிறுகதைகளைத் தேசியமொழிக்கு மொழிபெயர்க்கப்படும் பணியில் அதிகமான கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், மலேசியாவில் சீன, தமிழ் மொழிகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் தேசிய இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்னும் போராட்டத்திற்கு இன்னும் வெற்றி கிட்டவில்லை. எனவே, தேசிய நிலையில் தமிழ்ச் சிறுகதைகளை அடையாளம் காட்டத் தேசியமொழியில் அவற்றை மொழிபெயர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் (1995 - 2007) மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் 

அ. சிறுகதைத்தொகுப்புகள் வெளியீடு


மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் கடந்த பன்னிரண்டு ஆண்டுக்காலத்தின் நிலைமையைப் பற்றிய கேள்வி இப்பொழுது எழுத்தாளர்களிடையே, குறிப்பாக மலேசியாவின் முன்னணி எழுத்தாளர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றவர்களிடையே தோன்றியிருக்கின்றது என்பது உண்மையே. இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், சிறுகதைகளுக்கு எழுதப்படும் முன்னுரைகள், அணிந்துரைகள், வாழ்த்துரைகள் போன்றவற்றில் சிற்சில இடங்களில் இக்கேள்வி கேட்கப்பட்டு விடையும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக சிறுகதைத்துறையின் வளர்ச்சி படிக்கும் சமுதாயத்தைப் பொறுத்தே அமைந்திருக்கின்றது எனக் கூறலாம். ஆனால், மலேசியாவில் சிறுகதையைப் படிக்கும் சமுதாயம் பெரியதாக இருக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே படித்தாலும் இந்தச் சமுதாயம் படிப்பதெல்லாம் நாளேடுகளின் ஞாயிற்றுப் பதிப்புகளில் வெளிவரும் சிறுகதைகளை மட்டுமே. இவ்வாறு கூறப்படுவதற்கு நல்ல காரணம் உண்டு. மலேசியாவில் சிறுகதைத் தொகுப்பாக இருக்கட்டும், வேறு இலக்கியப் படைப்புகளாக இருக்கட்டும் தமிழ்ப் புத்தகக் கடைகளில் வைத்து விற்க முடியாத நிலை தொன்று தொட்டே இருந்து வருகின்றது. எனவே, எழுத்தாளர்கள், தங்களுடைய படைப்புகளை நூலாக வெளியிடுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். நூல் வெளியீடுகள் மூலம், இச்சிக்கலுக்குத் தீர்வு காணச் சில எழுத்தாளர்கள் துணிவுடன் முயற்சி செய்கின்றார்களெனினும் நூல் வெளியீடுகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அந்த முயற்சிக்கு ஊக்கம் தருவதாக இல்லை. பெரும்பாலும் நண்பர்கள், குடும்ப உறவினர்கள், தெரிந்தவர் என்ற நிலையிலேயே நூல் வெளியீடுகளுக்குக் கூட்டம் சேர்கின்றது. சில எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளுக்கு அதிகமானோர் வருகின்றனர் என்பது உண்மையாயினும் இவற்றை விதிவிலக்குகள் என்றே நாம் கொள்ள வேண்டும். ஏனெனில், நூல் வெளியீடு செய்ய வரும் பிரமுகரைப் பொறுத்தே இக்கூட்டத்தினரின் எண்ணிக்கையும் அமையும். எவ்வாறெனினும் ஏதோ ஒரு காரணத்திற்காக நூல் வெளியீட்டிற்கு வருகின்றனரேயன்றி நூல்களைப் பெற்றுச் சென்று அவற்றை முழுமையாகப் படித்துப் பார்ப்பதற்காக வருவோர் மிகக் குறைவானோரே. சிறுகதைப் படைப்பாளர்களிடமும் இத்தகைய போக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இந்த அப்பட்டமான உண்மையைச் செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம் அவர்களின் கதை ஒன்று தெளிவாகவே காட்டும்.

"என்னப்பா இது! அரசியல்வாதிங்கலாலதானே இன்னைக்குப் புத்தக வெளியீடு - கேஸட் வெளியீடெல்லாம் பிரமாதமா இருக்கு. எழுத்தாளர்களும் கலைஞர்களும் நல்லா சம்பாரிக்கிறாங்களே! என்றேன்.

ஆமா.... சந்தேகமேயில்ல. எப்படி? தலைவர் வர்ராரு. அவருக்காக இவுங்கள்ளாம் வர்ராங்க. வாங்குறாங்க. ஆனா, படிக்கிறாங்களா? ..... தலைவர கூப்பிடாம நீ ஒரு புத்தக வெளியீட செய்யி! போட்ட பணமே வருமாங்கிறது சந்தேகந்தான்."

நாளேடுகள், வார, திங்கள் இதழ்கள் ஆகியவற்றில் வருகின்ற சிறுகதைகளையும் எத்தனை விழுக்காட்டினர் படிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'இந்தக் கதை நன்றாக இருந்தது, அந்தக் கதை நன்றாக இருந்தது', என்று மறு வாரம் பத்திரிகைகளில் எழுதுவோர் இருக்கின்றனரெனினும் இவ்வாறு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே. அப்படியே எழுதினாலும் ஏடுகள் அவற்றையெல்லாம் வெளியிடுகின்றனவா என்பதும் கேள்விக்குறியே. இந்த நிலைமையில்தான் இன்றைய மலேசியச் சிறுகதை உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

பொதுவாக, மலேசியச் சிறுகதையின் வளர்ச்சியையோ தளர்ச்சியையோ ஆய்வு செய்வதற்கு கிடைக்கின்ற ஆவணங்கள் சிறுகதைத் தொகுப்புகள் மட்டுமே. திரு. பால பாஸ்கரன் தமது ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்ட 64 தொகுப்புகளுடன்36 (காண்க பின்னிணைப்பு) 1980க்குப் பின்னர் வெளியிடப்பட்ட தொகுப்புகளையும் ஏடுகளில் வெளிவந்த சிறுகதைகளையும் இணைத்துக் கொள்ளலாமெனினும் இவை எல்லாவற்றையும் திரட்டிப் படிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். எனவே, குறுகிய காலத்தில் இவற்றை ஆய்வு செய்து ஒரு கருத்தைக் கூறுவதும் இயலாத ஒன்றே. ஆகவே, கிடைக்கப்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள், முன்பே குறிப்பிட்டதுபோல தொகுப்புகளுக்கு எழுதப்பட்ட முன்னுரைகள், அணிந்துரைகள், வாழ்த்துரைகள், ஆய்வுரைகள், இடையிடையே கருத்தரங்குகளில் படைக்கப்படுகின்ற ஆய்வுக் கட்டுரைகள் ஆகியனவற்றையே சிறுகதைத்துறையைப் பற்றிய ஒரு கருத்தைக் கூறுவதற்கு பெரிதும் நம்பியிருக்க வேண்டியிருக்கின்றது.

கடந்த 1995 தொடங்கி 2007 வரையிலுள்ள பன்னிரண்டு ஆண்டுக் காலத்தில் வெளிவந்த தொகுப்புகளைப் பற்றிய துல்லிதமான புள்ளி விவரங்களும் கிடைத்தில. நாட்டின் பல பகுதிகளிலும் இத்தகைய நூல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுவதனாலும் வெளியிடப்படுகின்ற எல்லாத் தொகுப்புகளைத் திரட்டி வைப்பதற்கான நிறுவனமோ இயக்கமோ செயற்படாததனாலும் ஏற்பட்டுள்ள கவலைக்குரிய நிலை இது. எனினும், குறைந்தது எழுபது சிறுகதைத் தொகுப்புக்களாவது இக்காலகட்டத்தில் வெளியீடு கண்டுள்ளன என்பதில் ஐயமில்லை.

¨சை.பீர். முகம்மதுவின் 'வெண் மணல்' (1995),

இரா.இராமராவின் 'ஒரு தாயின் மனது' (1995),

நிர்மலா பெருமாளின் 'வரலாற்றுக்குள் ஒரு வரி' (1996),

எம்.எஸ்.விஜயராஜின் 'பூவிழிகள்' (1996),

ப.சந்திகாந்தத்தின் 'அங்கும் இங்கும்' (1997),

எம். பாலச்சந்திரனின் (தொகுப்பு) 'இள மனதின் வேர்கள்' (1997)

கவிக்கூத்தன் மா. இராமகிருஷ்ணனின், 'ஞானம்' (1997),

மு.அன்புச்செல்வனின் 'மு.அன்புச்செல்வன் சிறுகதைகள்' (1998),

மெ.அறிவானந்தனின் 'மெ.அறிவானந்தன் சிறுகதைகள்' (1998),

மா.சண்முகசிவாவின் 'வீடும் விழுதுகளும்' (முதற் பதிப்பு 1998),

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் 'பரிசு பெற்ற படைப்புகள்' (1998),

இலக்கியக் குரிசில் மா. இராமையாவின் 'திசை மாறிய பறவைகள்' (1998),

பி.கோவிந்தசாமியின் 'ஒரு விடியல்' (1999),

பி.எஸ் பரிதிதாசன், 'பரிதிதாசன் சிறுகதைகள்' (1998),

கோ.புண்ணியவானின் 'நிஜம்' (1999),

வீ.செல்வராஜின் 'பிரதமர் ஆடினால்' (1999),

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'சமுதாயக் கதைகள்' (1999),

சை.பீர். முகம்மதுவின் 'வேரும் வாழ்வும் முதல் தொகுப்பு' (1999),

மா. இராமையாவின் 'தேடலில் தொலைந்த நம்பிக்கை' (1999),

கோமகளின் 'புதுமைப்பெண்' (1999)

எஸ். ரேவதி நாதனின் 'சமுதாய அலைகள்' (1999)

மா.சண்முகசிவாவின் 'வீடும் விழுதுகளும்' (இரண்டாம் பதிப்பு 1999)

செங்கதிரோனின் 'நியாயங்கள்' (1999),

டாக்டர் மா.இராமையாவின் 'அமாவாசை நிலவு' (2000),

பூச்சோங் எம்.சேகரின் 'நீ என் நிலா' (2000),

கவிக்கூத்தன் மா. இராமகிருஷ்ணனின் 'தானம்' (2000),

ஸ்கூடாய் சி.வடிவேலுவின் 'சி. வடிவேலுவின் சிறுகதைகள்' (2000),

சாமி மூர்த்தியின் 'சாமி மூர்த்தி சிறுகதைகள்' ( 2001),

கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் 'நிறங்கள்' (2001),

மு.அன்புச்செல்வனின் 'விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்' (2001),

ரெ.கார்த்திகேசுவின் 'இன்னொரு தடவை' (2001),

சின்னருணா அ.பழனியாண்டியின் 'நிலவுக்கு எட்டாத வானம்!' (2001),

நா.வேலாயுதத்தின் 'சத்தியத்தின் இலட்சியம்' (2001),

ந. வரதராசனின் 'வாழ்வில் வசந்தம்' (2001),

செ.கோபாலனின் 'இனிப்பு மஞ்சள்' (2001),

சை.பீர். முகம்மதுவின் 'வேரும் வாழ்வும் 2, 3' (2001),

நிர்மலா பெருமாளின் 'தண்ணீரை ஈர்க்காத தாமரைகள்' (2002),

ப.சந்திரகாந்தத்தின் 'வலை' (2002),

பூ .அருணாசலத்தின் 'பூவோ பூ' (2002),

தொகுப்பாசிரியர் கீழாம்பூரின் 'மலேசியச் சிறுகதைகள்' (2003),

ரெ.கார்த்திகேசுவின் 'ஊசி இலை மரம்' (2003),

'ந.மகேஸ்வரியின் சிறுகதைகள்' (2003),

பழ. எட்டிக்கண் அன்பழகனின் 'தீயின் எச்சங்கள்' (2003),

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் 'பரிசு பெற்ற படைப்புகள்' (2003),

செ.கோபாலனின் 'அத்தரும் புகைவாசமும்' (2003),

வ.முனியனின் 'விழிக்க மறுக்கும் இமைகள்' (2004),

ரெ.சண்முகத்தின் 'ரெ.சண்முகம் கதைகள்' (2004)

எஸ்.பி.பாமாவின் 'அது அவளுக்குப் பிடிக்கல..!' (2004),

கெளரி சர்வேசனின் 'தீர்மானங்கள்' (2004),

கோ.புண்ணியவானின் 'சிறை' (2004),

சாரதா கண்ணனின் 'சாரதா கண்ணன் சிறுகதைகள்' (2005),

நா.ஆ.செங்குட்டுவனின் 'தமிழகத்தில் தவழ்ந்தவை' (2005),

கவிஞர் வீ.கோவிமணாளனின் 'பூவுக்கும் பொட்டுக்கும் விடுதலை கிடையாது' (2005),

நிலாவண்ணனின் 'அங்கீகாரம்' (2005),

ஆ.நாகப்பனின் 'கம்பி மேல் நடக்கிறார்கள்' (2006),

கா.இளமணியின் "இளமணியின் சிறுகதைகள்" (2006),

நிர்மலா ராகவனின் 'ஏணி' (2006),

வீ.ருக்குமணி லோகாவின் 'தந்தையின் தாய்மை' (2007)

நிர்மலா பெருமாளின் 'விலங்குகள்' ( 2007),

கே.எம். முருகேசனின், 'வானம் என்ன நிறம்?' (2007)

கு.கிருஷ்ணன், ஆ.நாகப்பன், எல்.முத்து ஆகியோரின் 'தேடல்' (2007),

ஆகியனவே அவை. அவற்றோடு 1995 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் வெளிவந்த பேரவைக் கதைகள் தொகுப்புகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பட்டியல் இன்னும் சற்று நீளமாகக்கூட இருக்கலாம். சிலருடைய பெயர்களும் நூல்தொகுப்புகளின் பெயர்களும்கூட விடுபட்டுப் போயிருக்கலாம். ஆனால், அதற்குக் கட்டுரையாளரின் ஆய்வுக் கண்களுக்கு அவை சிக்காமை காரணமேயன்றி வேறு காரணம் ஏதுமில்லை. ஒரு சிறுகதைத் தொகுப்புக்குச் சராசரி பதினைந்து கதைகள் என்று வைத்துக்கொண்டால்கூட ஏறத்தாழ ஆயிரம் சிறுகதைகளே இந்தப் பன்னிரண்டு ஆண்டுக் காலத்தில் நூலாக்கம் கண்டிருக்கின்றன என்று கூறுவது தவறாகாது. சில சிறுகதைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம் பெறுவதும் தவிர்க்க முடியாததாகையால் இந்த எண்ணிக்கையும் மேலும் குறையலாம். எவ்வாறெனினும், ஓராண்டுக்கு ஏறத்தாழ 100 சிறுகதைகளே நூலாகத் தொகுக்கப்பெற்றுள்ளன என்பது பெருமைக்குரிய ஒரு நிலைமையன்று. தவிர, தொகுக்கப்பெற்றுவிட்ட அத்தனை சிறுகதைகளுமே மலேசியச் சிறுகதைத்துறைக்கு அழகு சேர்ப்பனவா என்னும் கேள்விக்கு விடையளிப்பதும் கடினமே. அத்தனைத் தொகுப்புகளிலுமுள்ள சிறுகதைகளையும் படிக்காத நிலையில் அவற்றின் தரம் பற்றிக் கருத்துக் கூறுவதும் முறையாக இருக்காது என்பதால் தொகுப்புகளிலுள்ள சிறுகதைகளின் தரம் பற்றிக் கருத்துக் கூறுவது இங்குத் தவிர்க்கப்படுகின்றது. பொதுவாக, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் பழமொழி சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பொருந்தும் என்று தோன்றவில்லை. எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தாங்கள் எழுதிய அத்தனை சிறுகதைகளையும் எப்படியாவது தொகுத்து வெளியிட்டு விட வேண்டுமென்னும் வேட்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இது சாத்தியப்படாமல் போகின்றது. எனினும், மா.இராமையா, நா.ஆ.செங்குட்டுவன், ரெ.கார்த்திகேசு, மு.அன்புச்செல்வன், சை.பீர் முகம்மது, டாக்டர் மா.சண்முக சிவா, சாமி மூர்த்தி, ப.சந்திரகாந்தம், ந.மகேஸ்வரி, கோ.புண்ணியவான், பி.கோவிந்தசாமி, மா.இராமகிருஷ்ணன், நிலாவண்ணன், ஆ.நாகப்பன், பி.எஸ். பரிதிதாசன், செ.கோபாலன், நிர்மலா ராகவன், கா.இளமணி, நிர்மலா பெருமாள், மெ.அறிவானந்தன், வீ.செல்வராஜ் முதலியோரின் தொகுப்புகளை இக்கருத்துக்கு விதிவிலக்காகக் கொள்ளலாம்.

இத்தொகுப்புகளின் ஆசிரியர்களின் பெயர்கள் ஒன்றைத் தெளிவாகவே காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. பெரும்பாலான தொகுப்புகள் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகதைத் துறையில் ஈடுபாடு காட்டி வருபவர்களின் தொகுப்புகளாகவே இருக்கின்றன. அவற்றுள் பல பெயர்கள் மலேசியச் சிறுகதைத்துறையோடு அடிக்கடி தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வரும் பெயர்களே. ஆக, ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால் தொகுப்புகள் வெளியிடுவதில் இளையோரின் ஈடுபாடு இன்னும் போதுமான அளவு இல்லை என்பது வெள்ளிடைமலை.

ஆ. மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் தரம்

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் தரம், அமைப்பு, கதைக்கருக்கள், கதைத்திட்டம், கதைப்பின்னல், உத்திகள் ஆகியவற்றைப் பற்றி பாலபாஸ்கரன் தமது இரண்டு நூல்களிலும் (மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள், The Malaysian Tamil Short Stories 1930 ஖ 1980 A Critical Study) மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்திருக்கின்றார் என்பதில் ஐயமில்லை. ஆயினும், அவருடைய திறனாய்வு 1980ஆம் ஆண்டு வரையிலுள்ள காலகட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது என்பதை அடிப்படையாக வைத்தே அவருடைய கருத்துகளைக் கண்ணோட்டமிடல் வேண்டும். பொதுவாக, மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய பாலபாஸ்கரனின் பார்வை சற்று வித்தியாசமானது. சிறுகதைப் பண்புகளின் அடிப்படையில் தொடக்ககாலச் சிறுகதைகளைக் காணும்போது அவை சிறுகதைகளே அல்லவென்று ஆணித்தரமாகக் கூறும் அவர் அதன் பின்னர் 1979ஆம் ஆண்டு வரையிலும் வந்த பெரும்பாலான சிறுகதைகளிலும் உள்ள குறைபாடுகளை தமது நூல்களில், குறிப்பாக அவருடைய ஆங்கில நூலில், சுட்டிக் காட்டுகின்றார். அது மட்டுமன்று. சிறந்த கதைகளாகவும் பரிசுக்குரியனவாகவும் வியந்து பாராட்டப்பெற்ற சில சிறுகதைகளும்கூட சரியான கவனம் செலுத்திப் படைக்கப்படவில்லையென்பதாகவும் அவருடைய கண்ணோட்டம் அமைந்துள்ளது.

"மலேசியத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் கையாண்டுள்ள பல்வகைக் கதைத்திட்டங்களை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான சிறுகதைகள் மிகச் சாதாரணக் கதைத்திட்டங்களையே கொண்டிருக்கின்றன என ஒருவர் மிக எளிதாகக் கூறிவிட முடியும். 1950களில் வெளிவந்த ரத்ததானம், நினைவின் நிழல், மனித தெய்வம், கதைக்கொத்து, சபலம் ஆகிய தொகுப்புகளில் காதல் திருமணம், விதவை மணம், சமுதாய மாற்றம் ஆகியவை எழுத்தாளர்களின் பிரச்சார நோக்கத்தை வலியுறுத்துவதற்கான ஒரு கருவியாகவே கதைத்திட்டம் பயன்படுகிறது. கருப்பொருள் இன்னதுதான் என்பதைத் தெளிவாகக் காட்டாத நிலை, சாதாரணச் சிக்கல்கள், நம்பகத்தன்மையற்ற நிகழ்ச்சிகள், கதைக்கருவுக்கும் கதைப்பொருளுக்குமிடையே காணப்படும் குழப்பம், தொடர்பில்லாத தேவையற்ற நிகழ்ச்சிகள் ஆகியவை கதைத்திட்டங்களைப் பாதிப்பதில் அதிகப் பங்களிப்புச் செய்திருக்கின்றன."37 என்று காட்டும் அவருடைய திறனாய்வுப் பார்வை மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

எனினும், 1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கதைகளைப் பற்றிய அவருடைய ஆய்வு எழுத்தாளர்களிடையே சிறுகதை இலக்கியத்தைப் பற்றிய எண்ணத்தில் சற்றுத் தெளிவு காணப்படுவதாகவும் சிக்கல்களைக் காட்டுவதில் இறுக்கம், முரண்பாடுகள் ஆகியவை சற்று வளர்ச்சியடைந்திருப்பதாகவும் காட்டுகிறது. ஆனாலும், பல நல்ல எழுத்தாளர்களும் கதைத்திட்டத்திற்குப் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், செறிவான நடை, கதைப்பொருள் ஆகியவற்றினாலேயே அவர்களின் சிறுகதைகள் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதாகவும் அவருடைய ஆய்வு அமைந்திருக்கின்றது. 

இவற்றைத் தவிர்த்து, நம்பகத்தன்மையின்மை, கதாசிரியரின் தலையீடு, பிரச்சாரம், கட்டுரைபோல் எழுதுதல், ஒருமையின்மை, காலக்கிரமப்படி கதையைச் சொல்லிச் செல்லுதல் போன்ற குறைபாடுகளையும் பெரும்பாலான சிறுகதைகள் கொண்டுள்ளன என்றும் பாலபாஸ்கரன் காட்டுகின்றார். மேலும், பரிசு பெற்ற படைப்புகளான 'ஏணிக்கோடு', 'சிவப்பு விளக்கு', 'பயணம் முடிவதில்லை', 'நடுத்தெருவில்', 'கண்ணன் ரிமூவ் வகுப்பில் படிக்கிறான்', 'ஒரு தொண்டன் தலைவனாகிறான்', 'கோத்தோங் ரோயோங்' போன்ற படைப்புகளில் காணப்படும் சிறுகதைப் பண்புகளின் தொய்வையும் அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருப்பொருள்களைப் பொருத்தவரையிலும் பல சிறுகதைகளில் காலத்திற்கேற்ற கருப்பொருள்கள் காணப்படுகின்றன என்பதை மறுத்தல் முடியாது. 1970ஆம் ஆண்டுகளில் திராவிட இயக்கக் கருத்துகள் மலேசியாவில் தீவிரமாகப் பரப்பப்பட்டபோது சிறுகதையாசிரியர்களும் அவற்றைத் தமது சிறுகதைகளில் பயன்படுத்தத் தவறவில்லை. தோட்டத் துண்டாடல், சிவப்பு அடையாளக்கார்டு, வேலை பெர்மிட் போன்ற பிரச்சினைகளும் அப்பிரச்சினைகள் தலைதூக்கிய காலகட்டத்தில் அதிகமான சிறுகதைகளில் இடம் பிடித்துக்கொண்டன. நாட்டுப்பற்று, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை போன்ற கருப்பொருள்களும் சிறுகதைகளில் காட்டப்பட்டனவெனினும் இவை சிறுகதைகளில் காட்டப்பட்ட அளவுக்கு வாழ்க்கையில் இனங்களுக்கிடையே இருந்தது என்று கூறுவதற்கில்லை. எனினும், சில கருப்பொருள்கள் மலேசியச் சிறுகதைகளில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. காதல், பாசம், உறவுகள், கல்வி, குழந்தை இல்லாமை, கற்பு, அரசியல் போன்றவை அவற்றுள் சில.

பொதுவாக, மலேசியச் சிறுகதை வளர்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் மனநிறைவு கொண்டிருக்கின்றார்கள் என்று கூற முடியவில்லை. இளைய தலைமுறை எழுத்தாளர்கள் அதிகமாகச் சிறுகதைகள் படைக்கவில்லை என்ற ஆதங்கத்தோடு படைக்கப்படுகின்றவையும் சரியான திசையில் போகவில்லை என்பதே இவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது.

"மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை நாம் திரும்பிப் பார்க்கும்போது நமக்குப் பிரமிப்பு ஏற்படவில்லை. மாறாக அதிர்ச்சிதான் ஏற்படுகிறது." ஏறத்தாழ முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுகதைக் கருத்தரங்கு ஒன்றில் படைக்கப்பட்ட தமது கட்டுரையின்வழி இலக்கியக் குரிசில் மா.இராமையா காட்டும் காட்சி இது.

கடந்த காலங்களில் நாளேடுகளில் வெளியிடப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளும் மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சியைப் பற்றிக் கூறியதை விடவும் தளர்ச்சியைப் பற்றியே அதிகம் கூறின எனக் கொள்வதிலும் தவறில்லை. இன்றும்கூட இக்கருத்து தொடர்கிறது.

"செப்டம்பர் மாதத்தில் வெளிவந்துள்ள கதைகளைப் படித்து அதிலிருந்து ஏழு கதைகளைத் தேர்வு செய்து திறனாய்வு செய்திருக்கிறேன். இந்த 7 கதைகளில் குறிப்பிட்ட சில கதைகள் மட்டுமே சமுதாயத்தைப் பற்றிய கதைகளாக உள்ளன. மற்றவை ஏதோ சிறுகதை எழுதுகிறோம் - அவை பத்திரிகைகளில் வந்தால் சரி என்ற எண்ணத்தில் எழுதப்பட்டவை போன்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன........"39 எனச் செப்டம்பர் மாதச் சிறுகதைகளை ஆய்வு செய்த திரு. கு.தேவேந்திரன் அவர்கள் கூறுகிறார். ஏதோ சில சிறுகதைகளைப் படித்துவிட்டுச் சொல்லப்பட்ட கருத்தாக இதை எண்ணிப் பார்க்க முடியுமெனினும் பேரவைக் கதைகளைப் பற்றிய ஆய்வுரைகளிலும் இந்தக் கருத்து தொடர்ந்து பிரதிபலிக்கப்படுவதைக் காணமுடியும்.

பேரவைக் கதைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்துவரும் டாக்டர் வே.சபாபதி அவர்களும், "கடந்த சில ஆண்டுகளாகவே போட்டிக்கு வரும் கதைகள் தரத்திலும் திறத்திலும் நயத்திலும் சரிவுகண்டு வருகின்றன. இக்கதைகளைக் காணும்போது நம் படைப்பாளர்களுக்கு இன்னும் கூடுதலாகச் சமுதாய அரசியல் பிரக்ஞை கூர்மையாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ...... பல கதைகளில் மண்ணின் மணம் கமழவில்லை..... சில கதைகளில் பிரச்சாரப் போக்கும் காணப்படுகின்றது. கதை கூறுவதற்குப் பயன்படுத்தும் நோக்குநிலையிலும் குழப்பமான போக்கு காணப்படுகிறது. ... தவிர வடிவத்திலும் கதை கூறும் முறையிலும், உத்திகளின் பயன்பாட்டிலும் கதைமாந்தர் படைப்பிலும் புதுமையையோ சோதனை முயற்சிகளையோ காணமுடியவில்லை." என எழுதுகிறார்.

ஆகக் கடைசியாக வெளிவந்துள்ள பேரவைக் கதைகள் 21இன் ஆய்வுரையும் ஏறக்குறைய மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளைக் காட்டுவதாகவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருள் திரு. சித. நாராயணன் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 22 சிறுகதைகளிலிருந்து "ஓரளவு உயிர்ப்புள்ள, கலைவடிவம் கொண்ட ஏழு சிறுகதைகளை மட்டுமே இறுதிச் சுற்று ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்" எனத் தம்முடைய கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.41 மற்றக் கதைகளைப் பற்றிய எந்தக் குறிப்பும் அவருடைய கட்டுரையில் இடம் பெறாததால் அந்தக் கதைகளின் தரத்தைப் பற்றிய மதிப்பீட்டை அவர் சொல்லாமல் சொல்லி உணர்த்துகின்றார் என்பதில் ஐயமில்லை.

திரு. ந. ஆண்டியப்பனின் திறனாய்வுக் கட்டுரையும் சித. நாராயணன் அவர்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாகக் கூற முடியாது. பரிசுக்குரியனவாக அவர் தேர்ந்தெடுத்த மூன்று கதைகளுள் ஏப்ரல் மாதம் வெளிவந்த ஏழு கதைகளுள் எதுவுமே அடங்கவில்லை. மே மாதத்தில் வெளிவந்த சிறுகதைகளுள் ஒன்று மட்டுமே இறுதிச் சுற்று வரை சென்று பரிசு பெற்றிருக்கின்றது. ஜூன் மாதக் கதைகளுள் இரண்டு பரிசுக்குரியனவாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று பரிசுகள் என்னும்பொழுது மூன்று சிறுகதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பது உண்மையாயினும்கூட பெரும்பாலான சிறுகதைகளைப் பரிசுக்குரியனவல்ல என்று நீக்கி விடுவதில் திறனாய்வாளர் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்நோக்கவில்லை என்பது அவருடைய திறானாய்வுக் கட்டுரையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திறனாய்வாளர் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கதைக்கரு, கதை அமைப்பு, நடை, உத்தி, முடிவு ஆகிய கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஆனாலும், அவருடைய கூற்றுப்படி பல சிறுகதைகளின் கருப்பொருள்களில் புதுமை எதையுமே காண முடியவில்லை. சிறப்பான கரு என்ற அடைமொழி ஒரே ஒரு சிறுகதைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று கதைகளுக்கு நல்ல கரு, கரு நன்று, வித்தியாசமான கரு என்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை விட்டுவிட்டால் கருவால் சிறந்த கதை என எதையுமே அவர் அந்த மூன்று மாதக் கதைகளில் அடையாளம் காட்டவில்லையென்பது தெரிகிறது. உத்தி, நடை, முடிவு ஆகியவை பற்றியும் அவர் தமது திறனாய்வில் எந்தக் கதையையுமே சிறந்து விளங்குகின்றது என உதாரணம் காட்டிச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு கருத்தே.

இது ஒரே ஒரு நாளேட்டில் வெளிவந்த சிறுகதைகளைப் பற்றிய ஆய்வாளர்களின் கருத்துகளாக இருந்தாலும் மற்ற ஏடுகளின் கதைகளிலும் இத்தகைய ஒரு நிலைமையையே காண முடிகின்றது.


சிறுகதைகளின் உத்தி, நடை போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது டாக்டர் ரெ.கார்த்திகேசு அவர்கள் தமது "விமர்சன முகத்தில்" காட்டும் கருத்தையும் இங்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
"கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சிறுகதை அடைந்திருக்கும் உருவப்பொலிவையும் உத்திச் செழிப்பையும் மலேசியச் சிறுகதைகள் அடையவில்லை. உள்ளடக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கருதி அதைச் சொல்வதில் ஓர் எளிமையைப் பின்பற்றி அதோடு திருப்தி காண்பனவாகவே எங்கள் சிறுகதை உலகம் அமைந்து விட்டது." என்று ரெ.கார்த்திகேசு அவர்கள் கவலைப்படுகிறார்.

சிறுகதைத் துறையில் புதியவர்களின் வருகை கூடிக்கொண்டிருக்கின்றது. என்பது உண்மையே. தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை போன்ற நாளேடுகளின் ஞாயிற்றுப் பதிப்புகளைக் கண்ணோட்டமிட்டாலே இந்த உண்மை தெற்றென விளங்கும். ஆனாலும், இவர்களுள் எத்தனை பேர் சிறுகதை இலக்கணத்தை ஓரளவுக்காவது உள்வாங்கிக் கொண்டு தமது படைப்புகளைப் படைக்கின்றனர் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த இளைஞர்களுள் பெரும்பாலானோர், ஏடுகளில் அவர்களுடைய சிறுகதைகளுள் ஒன்றிரண்டு வந்து விட்டாலே இமயத்தை எட்டிவிட்டதாக எண்ணிக்கொண்டு அதே பாணியில் தொடர்ந்து எழுத ஆரம்பித்து விடுகின்றனர். இதுவே, இவர்களுடைய எழுத்து வளர்ச்சியை முடமாக்கி விடுகின்றது.


"இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளில் ஒரு புதுமை தெரிகிறது. ஆனால், அவர்கள் எழுத்து வடிவம் எப்படிப்பட்டது என்பதை அடையாளப்படுத்தும் அளவுக்கு அவர்கள் தொடர்ந்து எழுதுவது இல்லை. ஏதோ இந்தப் படைப்புலகில் தொட்டும் தொடாமலும்தான் அவர்கள் இருந்து வருகிறார்கள். இளைய தலைமுறை எழுத்துகள் தொடர்ந்து வந்தால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கண்டுகொள்ள முடியும்." இளைய தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றிய டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் கருத்து இது.

திரு. கோ.புண்ணியவானின் கருத்தும் ஏறத்தாழ டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் கருத்தை ஒட்டியதாகவே காணப்படுகின்றது. தற்போது இலக்கியத்துறையில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டிருந்தாலும் சில நம்பிக்கை தரக்கூடிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இருப்பதாகக் கூறி யுவராஜன், பா.அ.சிவம், சிவா பெரியண்ணன் போன்றோரை சிறுகதைத்துறையில் மின்னும் நட்சத்திரங்களாக அவர் குறிப்பிடுகின்றார்.

திரு. சீ. முத்துசாமியும் இப்பொழுது நிறைய இளைஞர்கள் தேடலுடன் இலக்கியத்தில் நுழைகின்றனர் என்று கூறுகின்றார். ஆயினும், தற்போது இலக்கியத் துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு நிறைய உழைப்பும் தியாக உணர்வும் தேவை என அவர் கருதுகிறார்.46 

இதற்குப் பல காரணங்கள் உண்டு. தரமான சிறுகதைகளை மலேசிய எழுத்தாளர்களுள் பெரும்பாலோர் படிப்பதில்லை என்பது அவற்றுள் ஒன்று. முதன் முதலாக எழுதத் தொடங்குகின்ற எழுத்தாளர்கள் மட்டுமல்லாது பல காலமாக எழுதிக்கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களும் இந்த வட்டத்திற்குள் அடங்குவர். நல்ல சிறுகதைகளைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதற்கான பொருளாதார வசதியின்மை மட்டும் இதற்குக் காரணமென்று கூறமுடியாது. படிக்கும் வழக்கம் பொதுவாகக் குறைந்து போய்விட்டது. பொருளாதாரச் சிந்தனை படிப்புச் சிந்தனையைப் பின்தள்ளிவிட்டது.

மற்றொரு காரணம் இந்நாட்டின் தமிழ்க்கல்வியின் நிலை எனலாம். ஆறாம் ஆண்டு வரை மட்டுமே ஒருவர் தமிழ்மொழியில் தமிழ்ப்பள்ளியில் கற்க முடியும். ஆனால், தமிழ்ப்பள்ளியிலும் தற்போது தமிழ்மொழியில் கற்பிப்பதற்கான பாடங்கள் குறைந்து போய்விட்டன. தமிழ்ப்பள்ளியெனப் பெயரைக் கொண்டிருந்தாலும் பாடநேரத்தில் மிக அதிகமான பாடங்களை மாணவர்கள் பிறமொழியிலேயே கற்கின்றனர். அந்த மொழிகளில் மாணவர்களின் அறிவு வளர்ச்சியடைந்தாலும் அதுவே தமிழ்மொழியில் அவர்களுடைய ஆற்றல் மேம்படாததற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. எனவே, தமிழ்மொழியில் அதிக ஆற்றல் இல்லாதவர்களாகவே பின்னர் இவர்கள் வெளிவருகின்றனர். இந்த நிலையில் ஆர்வத்தின் காரணமாகச் சிறுகதை படைக்கத் துணிகின்றார்களேயன்றி நல்ல தரமான படைப்புகளைப் படைக்கும் நிலையில் பெரும்பாலோர் இல்லை எனக் கூறலாம்.

ஆனாலும், இதற்காக மலேசியச் சிறுகதைத்துறை சரிவடைந்துகொண்டிருக்கின்றது என்று கூறுவதும் பொருந்தாது. புதியவர்களோடு பழையவர்களும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பழையவர்களுள் பலர் இப்பொழுதெல்லாம் போட்டிகளுக்கு மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும், இப்போட்டிகள் இன்று சிறுகதைத்துறையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று கூற முடியும். சிறந்த படைப்புகள் இப்போட்டிகளின் மூலம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும், இவற்றின் எண்ணிக்கை நிச்சயம் மனநிறைவளிப்பதாக இல்லை எனலாம். மேலும், மலேசிய நாட்டின் சிறந்த சிறுகதைகள் எல்லாமே தொகுப்புகளாக வெளியிடப்படுவதுமில்லை. சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் தாங்களே தொகுப்புக்கள் வெளியிடும்பொழுது அச்சிறுகதைகள் நூலில் இடம்பெறும் வாய்ப்புகள் உண்டு. மற்றபடி சிறந்த சிறுகதைகளைத் தொகுப்புகளாக வெளியிடும் பணியை யார் செய்வது என்னும் கேள்விக்குச் சரியான பதிலைக் காணமுடியவில்லை. திரு. சை. பீர் முகம்மது அவர்கள் இத்தகைய முயற்சியைச் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டார். மலேசியச் சிறுகதை எழுத்தாளர்கள் பலரின் கதைகளைச் சேகரித்து "வேரும் வாழ்வும்" என்னும் தலைப்பில் மூன்று தொகுப்புகளை அவர் வெளியிட்டார். அவருடைய வேரும் வாழ்வும் முதல் தொகுப்பு 1999ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் 43 சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. இரண்டாவது, மூன்றாவது தொகுப்புகள் ஐம்பது முதிர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை உள்ளடக்கி டிசம்பர், 2001 வெளிவந்தது. "இம்முயற்சிகள் தொடர வேண்டும்" என்பது சை.பீர். முகம்மது அவர்களின் அவா. நல்ல சிறுகதைகள் தொகுக்கப்படாமையால் வெளிநாட்டினர் மலேசியச் சிறுகதையைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க இந்த நிலைமை மலேசியச் சிறுகதைத்துறைக்கு ஏற்படுகின்ற ஒரு பேரிழப்பாகவும் இருந்து வருகிறது. 

சை. பீர் முகம்மதுவின் 'வேரும் வாழ்வும்' தொகுப்புகள் பற்றி இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மலேசியச் சிறுகதைத்துறைக்குக் கிடைத்துள்ள முக்கிய ஆவணங்களாக இவற்றைக் கருதலாம். சிறுகதைத்துறையின் வளர்ச்சிக்கு ஓர் ஐம்பது ஆண்டுக்காலம் பங்களிப்புச் செய்த ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களையும் அடையாளம் காட்டும் ஆவணங்களாக இவை விளங்குகின்றன என்பது மட்டும் இதற்குக் காரணமன்று. பங்களிப்புச் செய்துள்ள எழுத்தாளர்கள் கையாண்ட கதைக்கருக்கள், நடை, உத்தி, அமைப்பு போன்ற சிறுகதைகளின் பல்வேறு கூறுகளையும், மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் தரத்தையும் காட்டும் ஒரு கண்ணாடியாகவும் இவை விளங்குகின்றன என்பதும் இதற்குக் காரணமாகும்.

இ. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்பு


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு அளித்துள்ள பங்களிப்பு அதிகம் என்பதில் ஐயமில்லை. பங்சார் தமிழ்ப்பள்ளியில் 5.7.1958இல் நடைபெற்ற அமைப்புக்கூட்டத்தில் உருவெடுத்த இது 2.2.1959இல் 'மலாயா தமிழ் எழுத்தாளர்' சங்கம்எனப் பதிவு பெற்று 1963இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எனப் பெயர் மாற்றங் கண்டு இன்று ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்கிறது. இதன் முதல் தலைவராக இருந்தவர் திரு. சி.வீ.குப்புசாமி (1958 ஖ 1960) ஆவார். அவருக்குப் பின்னர், திரு. கனகரத்தினம் (1960-1961), முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியம் (1962 - 1974), திரு. சி.வடிவேலு (1974 - 1980), திரு. எம்.துரைராஜ் (1974 - 1987), ஆதி குமணன் (1987 - 2002) ஆகியோர் இச்சங்கத்தினைக் கண்ணெனப் போற்றி வளர்த்துள்ளனர். ஆதி குமணன் அவர்கள் தாமே பதவியை விட்டு விலகிக் கொள்ளத் தற்பொழுது சங்கத்தின் தலைவராக இருக்கும் பெ. இராஜேந்திரன் அவர்கள் 2002 முதல் தலைமைப்பொறுப்பில் இருந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு வருகிறார். 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை உள்ள இந்த நீண்ட காலகட்டத்தில் எழுத்தாளர்களுக்காகவும் படைப்பிக்கியத்திற்காகவும் ஆற்றியுள்ள பணிகள் பல. அவற்றை ஒவ்வொன்றாக விவரிக்கின் பெருகுமாதலால் சிறுகதை இலக்கியம் சார்ந்த அதனுடைய சில முக்கியப் பங்களிப்புகள் மட்டுமே இங்குக் குறிப்பிடப்படுகின்றன.

i. சிறுகதைத் திறனாய்வுகள்

சிறுகதைத்துறையை மேம்படுத்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எடுத்து வந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மாதாந்திரச் சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்கு மிக முக்கியமானது. இதைப் பற்றி மேலே விளக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் புதிய செயலவை இத்திட்டத்திற்குப் புத்துயிர் அளிப்பதென முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளில் தற்பொழுது கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

ii. டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு


மலேசியத் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பெற்று இப்போட்டிக்கு அனுப்பப்படுகின்ற நூல்களுள் சிறந்தவையென நீதிபதிகள் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நூலுக்கு/நூல்களுக்கு அமரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக அளிக்கப்படுகின்ற பரிசு இது. டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் மலேசிய அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவராவார். கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்புத்தகப் பரிசளிப்புக்கான தொகையை டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் குடும்பத்தினர் (குறிப்பாக டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் இளவல் டத்தோ வி.எல். காந்தன் அவர்கள்) அளித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த எல்லா இலக்கியப் படைப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நூலுக்கே இப்பரிசு (5000.00 ரிங்கிட்) அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட இலக்கியத்திற்கான (கட்டுரை, சிறுகதை, கவிதை, நாவல்) பரிசளிப்பாக இது தற்பொழுது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் நான்கு ஆண்டுகளுக்கொரு முறை ஓர் இலக்கியத்தைச் சார்ந்த நூல்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு வழங்கப்படுகின்றது. இம்முறை 2005ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகின்றது. பரிசுத்தொகையும் 7000.00 ரிங்கிட்டாக இப்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது.

டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசளிப்பு விழா


இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கியப் பரிசளிப்புத் திட்டம் முதன் முதலாக 1983இல் தொடங்கப்பட்டது. டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் மலேசிய அரசில் துணையமைச்சராக இருந்தவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். தமிழ் நேசன் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவருடைய நினைவாக நடத்தப்படுகின்ற பரிசளிப்புத் திட்டம் இது.

தொடக்கத்தில் இவ்விலக்கியப் பரிசளிப்பு சிறுகதை, கட்டுரை, கவிதை, மேடை நாடகம் என்னும் துறைகளுக்காக வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களில் வளர்ந்த எழுத்தாளர், வளரும் எழுத்தாளர் என இருவர் அடையாளம் காணப்பட்டு வளர்ந்த எழுத்தாளருக்கு 300.00 ரிங்கிட்டும் வளர்ந்து வரும் எழுத்தாளருக்கு 100.00 ரிங்கிட்டும் பரிசளிக்கப்பட்டது. முதல் ஆண்டில் சிறுகதைக்காக மு.அன்புச்செல்வன், நா.சுப்புலட்சுமி ஆகிய இருவரும், கட்டுரைக்காக அ.மணிசேகரன், இரா.இராமராவ் இருவரும், கவிதைக்காக டி.எஸ்.பொன்னுசாமி, வே.தேசகுரு ஆகிய இருவரும் இவ்விலக்கியப் பரிசினைப் பெற்றனர். தவிர, மேடை நாடக ஆசிரியருக்கான பரிசை நா.ஆ.செங்குட்டுவனும், நூலாசிரியர், இலக்கியப் பணியாளர் எனப்படும் துறைகளுக்கான பரிசுகளை முறையே பாதாசன், மெ.அறிவானந்தன் ஆகியோரும் பெற்றனர். ஆயினும், 1986ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பரிசளிப்பில் நாவல் துறையும் இணைத்துக்கொள்ளப்பட்டு முதன் முறையாக அத்துறைக்கான பரிசுகள் ப. சந்திரகாந்தத்துக்கும் (300.00) நா.சந்திரனுக்கும் (100.00) வழங்கப்பட்டன. மற்றத் துறைகளுக்கான பரிசுகளை சாரதா கண்ணன், எஸ்.கமலா (சிறுகதை), வி.விவேகானந்தன், மு.கணேசன் (கட்டுரை), வி.பூபாலன், ஏ.எஸ்.பிரான்சிஸ் (கவிதை), கா.ப.சாமி (நூலாசிரியர்) எஸ்.பாலு (நாடக ஆசிரியர்), பைரோஜி நாராயணன் (இலக்கியப் பணியாளர்) ஆகியோர் பெற்றனர்.47 பின்னர், இப்பரிசளிப்புக்கான தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு 2005ஆம் ஆண்டிலிருந்து ஆகக் கடைசியாக 2007ஆம் ஆண்டு நடந்த இப்பரிசளிப்பு விழாவில் கவிதைக்காகச் சி. அன்பானந்தமும், சிறுகதைக்காகச் சை. பீர்.முகம்மதுவும், கட்டுரைக்காக முனைவர் முரசு நெடுமாறனும் நாடகத்திற்காகச் சுகன் பஞ்சாட்சரமும் பரிசளிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர்த்து இளைய தலைமுறை எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்ட இராம சரஸ்வதி (கவிதை), கி.இ.உதயகுமாரி (சிறுகதை), சி.அருண் (கட்டுரை), ஜெயசுதா (நாடகம்) ஆகியோரும் பரிசுகள் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை ஆகிய நான்கு துறைகளில் ஒவ்வொரு துறையிலிருந்தும் எழுத்தாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 1500.00 ரிங்கிட் பரிசளிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுகின்றனர். தவிர, இளைய தலைமுறை எழுத்தாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களும் 500.00 ரிங்கிட் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

ஆகக் கடைசியாக 2007ஆம் ஆண்டு நடந்த இப்பரிசளிப்பு விழாவில் கவிதைக்காகச் சி. அன்பானந்தமும், சிறுகதைக்காகச் சை. பீர்.முகம்மதுவும், கட்டுரைக்காக முனைவர் முரசு நெடுமாறனும் நாடகத்திற்காகச் சுகன் பஞ்சாட்சரமும் பரிசளிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர்த்து இளைய தலைமுறை எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்ட இராம சரஸ்வதி (கவிதை), கி.இ.உதயகுமாரி (சிறுகதை), சி.அருண் (கட்டுரை), ஜெயசுதா (நாடகம்) ஆகியோரும் பரிசுகள் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். 

ஆகக் கடைசியாக 2007ஆம் ஆண்டு நடந்த இப்பரிசளிப்பு விழாவில் கவிதைக்காகச் சி. அன்பானந்தமும், சிறுகதைக்காகச் சை. பீர்.முகம்மதுவும், கட்டுரைக்காக முனைவர் முரசு நெடுமாறனும் நாடகத்திற்காகச் சுகன் பஞ்சாட்சரமும் பரிசளிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர்த்து இளைய தலைமுறை எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்ட இராம சரஸ்வதி (கவிதை), கி.இ.உதயகுமாரி (சிறுகதை), சி.அருண் (கட்டுரை), ஜெயசுதா (நாடகம்) ஆகியோரும் பரிசுகள் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.

இப்பரிசளிப்பு விழா டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் அவர்களின் குடும்பத்தின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சான்றோர் நினைவாகத் தங்க விருதுகள்


தமிழ்ச் சான்றோர்களான தமிழவேள் கோ.சாரங்கபாணி, செந்தமிழ்ச்செல்வர் சீ.வி.குப்புசாமி, தவத்திரு தனிநாயக அடிகளார், முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியம், சமூகக் கலைமாமணி சா.ஆ.அன்பானந்தன் ஆகியோர் பெயர்களில் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தங்க விருதுகளை வழங்கிச் சிறப்புச் செய்யும் திட்டத்தையும் ஒவ்வோர் ஆண்டுப் பொதுக்கூட்டத்தன்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது. இது சிறுகதைத்துறைக்கு மட்டுமே உரிய விருதளிப்பன்று. எனினும், சிறுகதைத்துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களும் இவ்விருதளிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுகின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் ஆதரவோடும் மலேசிய இந்தியர் காங்கிரஸ், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இயக்கங்கள் அளித்த நிதியுதவியுடனும்48 தொடங்கப்பட்ட அறநிதியிலிருந்து கிடைக்கின்ற வட்டிப் பணம் இவ்விருதளிப்பு நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தங்க விருது 1983ஆம் ஆண்டு முதல் 1985 வரையில் மூன்று எழுத்தாளர்களுக்கும், 1986 முதல் 1994 வரை நான்கு எழுத்தாளர்களுக்கும், 1995ஆம் ஆண்டு முதல் ஐந்து எழுத்தாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் இவ்விருதளிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நாட்டிலுள்ள மூத்த எழுத்தாளர்களுள் ஏறத்தாழ அனைவருமே இவ்விருதளிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007ஆம் ஆண்டில் கவிஞர் முத்துப்பாண்டி (தமிழவேள் கோ.சாரங்கபாணி விருது), கவிஞர் ஜோசப் செல்வம் (தவத்திரு தனிநாயக அடிகளார் விருது), கவிஞர் எ. அண்ணாமலை (முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் விருது), திரு. க. பூபாலன் (செந்தமிழ்செல்வர் சீ.வி.குப்புசாமி விருது), திருமதி நிர்மலா பெருமாள் (சமூகக் கலைமாமணி சா.ஆ. அன்பானந்தன் விருது) ஆகியோர் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.49

சிறுகதைத்துறைக்கு மலேசியத் தமிழ் ஏடுகளின் பங்களிப்புமலேசியத் தமிழ் இலக்கியத்திற்குத் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை தமிழ் ஏடுகளே உயிர்நாடியாக இருந்து வருகின்றன. தமிழ் ஏடுகளின் பங்களிப்பின்றி இந்நாட்டில் எந்த இலக்கிய வடிவமும் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியுமா என்பதும் ஐயத்துக்குரியதே. எனவே, மலேசியத் தமிழ் இலக்கியத்தையும் தமிழ் ஏடுகளையும் பிரித்துப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.

மலேசியத் தமிழ்ச் சிறுகதை இலக்கியமும் இந்நாட்டில் விதைக்கப்பட்டு வேரூன்றி வளரத் தமிழ் ஏடுகள் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. தொடக்க காலத்தில் சுதந்திரோதயம், பாரதமித்திரன், யுவபாரதம், ஜயபாரதம், புதுயுகம், தமிழ்க்கொடி, புது உலகம், ஜனவர்த்தமானி, உதய சூரியன், கலியுக நண்பன், பாரத நேசன், தமிழ் நேசன், மலாய் மணி, சமுதாய ஊழியன், சமரசன், தேசாபிமானி, தமிழ்ச்செல்வன், இன்ப நிலையம், திராவிட கேசரி முதலிய ஏடுகளில் சிறுகதைகள் வெளியிடப்பட்டன. இவற்றுள் சில கிழமை ஏடுகளாகவும், திங்கள் ஏடுகளாகவும் மலர்ந்துள்ளன. சில குறுகிய காலமே வாழ்ந்தாலும் சிறுகதை இந்நாட்டில் வேரூன்ற அவையும் அடித்தளமாக இருந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டு ஜப்பானியர் ஆட்சி இந்நாட்டில் சில காலம் நடந்தபோதும் ஏடுகள் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றிய பணி தடைப்பட்டுப் போகவில்லை. மாறாக அதற்கு அக்காலகட்டத்திலும் நீரூற்றி வளர்த்தவை தமிழ் ஏடுகளே. மேலே குறிப்பிடப்பட்ட சுதந்திரோதயம், யுவபாரதம், தமிழ் நேசன், புது உலகம், உதய சூரியன் போன்ற ஏடுகளோடு பாலபாரதம், சுதந்தர இந்தியா, ஜெயமணி, ஐயபாரதம், இடிமுழக்கம், இளங்கதிர், இளம்பிறை, இஸ்லாமிய இளைஞன் என்னும் ஏடுகளும் ஐப்பானியர்கள் காலத்தில் வெளிவந்து சிறுகதைத்துறையை வளர்த்தன.

ஜப்பானியர் காலத்துக்குப் பிறகு இன்று வரையிலும்கூட ஏடுகளே சிறுகதையை வளர்க்கப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் பல இன்று இல்லை; 'வெளிவந்தன' என்னும் சொல்லுக்கு உரியனவாகி விட்டன. இருப்பினும், சிறுகதைத்துறைக்கு அவற்றின் பங்களிப்பும் நிறையவே உண்டு. மலைமகள், தினமணி, தமிழ் மலர், தின முரசு, தலைவன், தமிழ் ஓசை, புதிய சமுதாயம், தூதன், அரும்பு, மயில், சூரியன், இதயம், உதயம், முத்தமிழ், தாமரை, காவலன், பொன்னி, முல்லை ஆகியவை அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. இவற்றின் பங்களிப்பு தொடர்ந்து கிடைக்காமற் போயினும்கூட இவை விட்டுச் சென்ற இடத்தைப் புதிய புதிய ஏடுகள் நிரப்பிக்கொண்டே இருப்பதால் சிறுகதைத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டுகொண்டே இருக்கிறது. 

இன்று வெளிவருகின்ற பல ஏடுகளில் (தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, நயனம், தென்றல், விடியல், வணக்கம் மலேசியா, செம்பருத்தி, மன்னன்) சிறுகதைகள் இடம் பெறுகின்றன. எனினும், வார, மாத இதழ்களைவிட 1924இல் தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளாக  சிறுகதைத்துறைக்கு உரமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கும் தமிழ் நேசன் பத்திரிகை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை என்னும் மூன்று முக்கிய நாளேடுகளின் பங்களிப்பு மலேசியச் சிறுகதைத்துறையில் குறிப்பிடத்தக்கவையாகும். 

மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு

மலேசியச் சிறுகதைத்துறைக்கு மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையைத் தவிர்த்து அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்து வரும் மாணவர்களும் ஒரு வகையில் பங்களிப்புச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுள் சிலர் தமது பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக மலேசிய நாட்டில் பல காலமாகச் சிறுகதைகள் எழுதி வருகின்ற நல்ல எழுத்தாளர்களின் படைப்புகள், ஏடுகளில் வெளிவந்த சிறுகதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் படைத்துள்ளனர். அந்த வகையில், இதுவரையிலும் '1998ஆம் ஆண்டு தமிழ் நேசன் சிறுகதைகள்: ஓர் ஆய்வு' (வேலுமணி சதாசிவம்), 'பேரவைக் கதைகளில் சமகால நிகழ்வுகள்: ஒரு பார்வை' (தனபாக்கியம் இராஜகோபால்), '2002ஆம் ஆண்டு மலேசிய நண்பன் சிறுகதைகளில் சமுதாயச் சிக்கல்கள்' (விமலாதேவி மாணிக்கம்), 'கோ.புண்ணியவான் படைப்புகள்: ஓர் ஆய்வு' (குமரகுரு குப்புசாமி), 'சீ.முத்துசாமியின் படைப்புகள்: ஓர் ஆய்வு' (ரேணுகா குருசாமி), 'சாமி மூர்த்தியின் சிறுகதைகள்: ஓர் ஆய்வு' (சந்திரசேகரன் சின்னப்பன்), 'மலேசியப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் பெண்ணியம்' (விவேகாநந்தன் சுப்பிரமணியன்), 'பி.கோவிந்தசாமியின் சிறுகதைகள்: ஓர் ஆய்வு' (அண்ணாதுரை முருகையா), 'ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகள்: ஓர் ஆய்வு' (முகிலன் வீரபுத்ரன்), 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் (1991-2000) (நீலமலர் தங்ககிருஷ்ணன்), 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் குடும்ப உறவுச் சிக்கல்கள்' (ரேவதி முனியாண்டி@ரெங்கநாதன்), 'மலேசியத் தமிழ்ப்படைப்பாளிகளின் பார்வையில் பெண்ணியம்' (அஜுந்தா குப்பன்), 'மா.சண்முகசிவாவின் வீடும் விழுதுகளும்: ஓர் ஆய்வு' (புஷ்பா சுப்பையா), 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் கல்விப் பிரச்சினைகள்' (சாந்தி காளியப்பன்), 'மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் முதியோர் பிரச்சினைகள்' (வாணிஸ்ரீ இராமகிருஷ்ணன்) என்னும் தலைப்புகளில் கட்டுரைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் முழுமையான ஆய்வுகள் என்று கூறுவதற்கில்லை. எனினும், ஒட்டுமொத்தமாக இக்கட்டுரைகள் யாவும் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்குகள் பற்றிய நல்ல தகவல்களை வழங்குகின்றன. இவை யாவும் நூல் வடிவம் பெறும் என நம்பிக்கை கொள்ள முடியவில்லை. நூல் வடிவம் பெற்றால் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சி, தரம், கருப்பொருள்கள் முதலியனவற்றைப் பற்றி அறிய உதவும் நல்ல ஆவணங்களாக இவை மிளிரும். எனினும், மலேசியச் சிறுகதைகளை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வுகள் செய்வதற்குரிய அடிப்படையை இக்கட்டுரைகள் அளித்துள்ளன என்பதில் ஐயமில்லை.


மகளிர் பங்களிப்பு

மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் மகளிரின் பங்களிப்பைப் பற்றி நிறையவே எழுத முடியும். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் பல துறைகளிலும் இவர்களுள் பலர் முத்திரை பதித்துள்ளனர். சிறுகதையைப் பொறுத்த மட்டிலும் 1960ஆம் ஆண்டுகளிலிருந்து பல காலம் தொடர்ந்து எழுதியவர்களும் இன்றும் எழுதிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. பாவை, க. பாக்கியம், துளசி, இராஜம் கிருஷ்ணன், வில்வமலர், ஜனகா சுந்தரம், ப. பத்மா தேவி, நிர்மலா இராகவன், நிர்மலா பெருமாள், சாரதா கண்ணன், சு.கமலா, ஆதிலட்சுமி, எம். ஜெயலட்சுமி, மல்லிகா சின்னப்பன், வீ.தீனரட்சகி, நா.மு.தேவி, கண்மணி கிருஷ்ணன், நேசமணி, வே.இராஜேஸ்வரி, கமலாட்சி ஆறுமுகம், தா.ஆரியமாலா, இ. தெய்வானை, பத்மினி ராஜமாணிக்கம், கோமகள், எஸ்.பி.பாமா, ஆரியமாலா குணசுந்தரம், ச.சுந்தராம்பாள் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் சிலர் சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்கின்றனர். திருமதி ப.பத்மாதேவி அவர்கள் குறிஞ்சிப் பூக்கள் (1993) என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். ந.மகேஸ்வரியின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'தாய்மைக்கு ஒரு தவம்' 1985லும் 'மகேஸ்வரியின் கதைகள்' 2003லும் வெளிவந்தன. பாவையின் சிறுகதைத் தொகுப்புகளாக 'ஞானப்பூக்கள்', 'கோடுகள் கோலங்களானால்' என்னும் இரண்டு தொகுப்புகளும், க.பாக்கியத்தின் தொகுப்பாக 'முரண்பாடுகள்' என்னும் தொகுப்பும், தா. ஆரியமாலாவின் தொகுப்பாகப் 'பூச்சரம்' என்னும் தொகுப்பும், எஸ். பி. பாமாவின் தொகுப்பாக 'அது அவளுக்குப் பிடிக்கல' (2004) என்னும் தொகுப்பும், கமலச்செல்வி எனப்படுகின்ற கமலாட்சி ஆறுமுகத்தின் தொகுப்புகளாக 'சிந்தனை மலர்கள்', 'தியாகங்கள்' என்னும் இரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. மற்றவர்களுள் 1984 முதல் எழுதி வரும் கோமகள் இதுவரையிலும் 'புதுமைப்பெண்' (1999) என்னும் தம்முடைய சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பையும் பெண் எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளைக் கொண்ட 'கயல்விழி' என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மகளிருள் மிக அதிகமான சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டவராக ஒருவரைச் சொல்வதானால் நிர்மலா பெருமாள் அவர்களுக்கே அப்பெருமையைத் தர வேண்டும். இதுவரையிலும் 'நெருப்பு நிலவு' (1988), 'மலரட்டும் மனித நேயங்கள்' (1991) 'வரலாற்றுக்குள் ஒரு வரி' (1996), 'தண்ணீரை ஈர்க்காத தாமரை' (2002), 'விலங்குகள்' (2007) என்னும் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். இவருடைய எழுத்துப் பணி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இடைநிலைப்பள்ளிகளில் சிறுகதைப் பயிலரங்கம்

பள்ளிச் சோதனைக் கேள்விகளில், குறிப்பாக பி.எம்.ஆர், எஸ்.பி.எம் ஆகிய சோதனைகளில் கடந்த சில ஆண்டுகளாகச் சிறுகதை எழுதும் கேள்வி ஒன்றும் அளிக்கப்படுவதால் இடைநிலைப் பள்ளிகளில் சிறுகதை எழுதுவதற்கும் ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதற்காக, இயக்கங்களும், எழுத்தாளர் வாசகர் வட்டங்களும்கூட சிறுகதை எழுதுவதற்கான பயிற்சிகளைச் சோதனைகள் நெருங்கும் காலகட்டங்களில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அளித்து வருகின்றன. அண்மையில் நெகிரிசெம்பிலான் ரந்தாவ் இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்கம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பாவலர் ஐ.இளவழகு அவர்கள் இதனை நடத்தியுள்ளார்.54 ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பயிலரங்கில் கலந்து பயன் பெற்றுள்ளனர் 'செமினி தமிழ் வாசகர் இயக்கமும்' இத்தகைய பயிலரங்கம் ஒன்றை நடத்துவதற்கான அறிவிப்பைச் செய்துள்ளது. இந்த முயற்சிகள் வரவேற்கத்தக்கன. சிறுகதை எழுதுவதற்கான அடித்தளத்தை இடைநிலைப்பள்ளி நிலையிலேயே அமைப்பது சிறுகதைத்துறையை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும். எனினும், இச் சோதனைகளுக்கு அமரும் மாணவர்களுள் எத்தனை பேர் சோதனைகள் முடிந்த பின்னர் தொடர்ந்து சிறுகதை படைப்பதில் நாட்டம் செலுத்துவர் என்னும் கேள்விக்குப் பதில் கூற முடியும் என்று தோன்றவில்லை. 


மலேசியச் சிறுகதை வளர்ச்சிக்கு அடுத்த கட்ட நடவடிக்கை


மலேசியாவில் இலக்கியத்திற்கெனத் தனி இதழ் எதுவும் தற்சமயம் வெளிவருவதாகத் தெரியவில்லை. அண்மையில் வெளியீடு கண்ட 'வல்லின'த்தில் அதற்கான முயற்சிகள் இருப்பது தெரிகிறது. எனினும், அதனுடைய இலக்கியப் பணியைப் பற்றிக் கருத்துக் கூற இன்னும் காலம் கனியவில்லை.ஏடுகளின் பணி/நடவடிக்கை


பெரும்பாலான நாள், வார, மாத இதழ்கள் இன்று பொருளை நாட்டமாகக்கொண்டே நடத்தப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆக, விற்பனையை அதிகரிக்க வாசகர்கள் விரும்பும் விஷயங்களுக்கே இவை யாவும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகின்றன. அதனால், இலக்கிய வளர்ச்சிக்கான முயற்சி என்பது அவற்றிற்கு ஒரு சிறு பங்களிப்பாகவே இருந்து வருகின்றது என்பதே உண்மை. ஆனாலும், மலேசிய நாட்டில் வெளியிடப்படும் பெரும்பாலான நாள், வார, மாத இதழ்களும் இல்லாது போகுமானால் இலக்கியத்தைப் பற்றியோ அதன் வளர்ச்சியைப் பற்றியோ எண்ணிப்பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை. மலேசியாவில் இலக்கியம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்த நிலைமைதான் நிலவி வருகின்றது. ஆனாலும், நல்ல சிறுகதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதல், சிறுகதைகளைத் திருத்தி வெளியிடுதல், வெளியிடப்படும் எல்லாச் சிறுகதைகளுக்கும் ரொக்கப் பரிசளித்தல் போன்ற சில நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன்வழி மலேசியத் தமிழ் ஏடுகள், தமிழ் இலக்கியத்தை, குறிப்பாகச் சிறுகதை இலக்கியத்தின் தரத்தை மேம்படுத்த முடியும். 

திறனாய்வுக் கருத்தரங்குகள் நடத்துதல்/கட்டுரைகளைத் தொகுத்தல்

மலேசியாவில் சிறுகதைத்துறை சரியான முறையில் வளர்ச்சி பெறாமல் இன்றும் தளர்நடை போடும் குழந்தையாகவே இருப்பதற்குச் சிறுகதைத் திறனாய்வுகள் போதுமான அளவும் சீரிய முறையிலும் மேற்கொள்ளப்படாததும் ஒரு காரணமாக விளங்குகின்றது. சிறுகதைப் போட்டிகள் சிறுகதைகள் படைப்பதற்கான ஊக்குவிப்பை அளிக்கின்றனவெனினும் இவை மட்டுமே சிறுகதைத்துறையை வளர்க்கப் போதுமானவையன்று என்பதை சிறுகதையின் இன்றைய நிலைமை தெளிவாகவே காட்டுகின்றது. பெரும்பாலான போட்டிகளில் சிறந்தவையெனக் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் அந்நேரத்திற்குச் சிறந்தவையெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியனவாக மட்டுமே விளங்குகின்றன. பல போட்டிகளில் அச்சிறுகதைகள்கூட விரிவான திறனாய்வுப் பார்வைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நாடு முழுவதும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள எழுத்தாளர், வாசகர் இயக்கங்கள் பரிசு பெற்ற சிறுகதைகளைத் திறனாய்வு செய்யும் பணியினை விடாது செய்தல் வேண்டும். தவிர, கருத்தரங்குகளில் படைக்கப்பட்ட கட்டுரைகளுள் சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சியையும் அவை மேற்கொள்ள வேண்டும். மேலும், நல்ல சிறுகதைகளைப் படைப்பதற்கு எழுத்தாளனிடம் மொழித்திறமையும் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏடுகளில் வெளி வரும் பல சிறுகதைகளைக் காணும்பொழுது சிறுகதை எழுத்தாளர்களிடம் மொழித்திறமையையும் வளர்க்க வேண்டியதன் அவசியம் இருப்பதையும் உணர முடிகின்றது. ஆகவே சிறுகதைக்காக நடத்தப்படும் கருத்தரங்குகள் சிறுகதைகளில் வந்துள்ள இலக்கணப் பிழைகளையும் சுட்டிக் காட்டி வழிகாட்டுவனவாகவும் அமைய வேண்டும்.

சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுதல்


மலேசியாவில் ஏடுகளும் இயக்கங்களும் அவ்வப்போது சிறுகதைப் போட்டிகளை நடத்திப் பரிசுகள் அளித்து வருகின்றனவெனினும் சில இயக்கங்களே பரிசு பெற்ற படைப்புகளை நூலாக வெளியிடும் முயற்சியில் இறங்குகின்றன. இதனால், பரிசு பெற்ற பல நல்ல படைப்புகள் நூல்களில் இடம் பெறாமலே காணாமல் போய்விட்டன. இந்த நிலைமையும் மலேசியச் சிறுகதைத்துறைக்கு உகந்ததல்ல. எனவே, போட்டிகளை நடத்தும் இயக்கங்கள் யாவுமே பரிசு பெற்ற படைப்புகளை நூலாக வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் தரமான சிறுகதைகளை மலேசிய எழுத்துலகமும் பிறநாட்டு எழுத்துலகமும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

நிறைவு...


 

மொழி

Type in:

உருவாக்கம்

பதிப்புரிமை 18/10/2006 அறிமுக விழா 15/02/2007

வருகையாளர் கணக்கீடு

இன்று6
மாதம்209
அனைத்தும்73151

VCNT - Visitorcounter

தமிழ் வாழ்த்து

There seems to be an error with the player !

நூலகம்

விளம்பரம்

இங்கு விளம்பரங்கள் செய்ய வேண்டுமா? இன்றே தொடர்பு கொள்க